
ஆண்டின் முதல் ஓபன் டென்னிஸ் தொடரான ஆஸ்திரேலியாவின் ஓபன் டென்னிஸ் தொடர் மெல்பர்ன் நகரில் நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரில் மகளிர் ஒற்றையர் பிரிவு 4ஆவது சுற்றில் முதல் நிலை வீராங்கனையும், கடந்த ஆண்டு பிரெஞ்சு ஓபன், அமெரிக்க ஓபனில் பட்டம் வென்றவருமான போலந்தின் இகா ஸ்வியாடெக், போட்டித் தரவரிசையில் 22ஆவது இடத்தில் உள்ள கஜகஸ்தானின் எலெனா ரைபகினாவை எதிர்த்து விளையாடினார்.
சுமார் ஒரு மணி நேரம் 29 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் விம்பிள்டன் சாம்பியனான ரைபகினா 6-4, 6-4 என்ற நேர் செட்டில் ஸ்வியாடெக்கை வீழ்த்தி கால் இறுதி சுற்றுக்கு முன்னேறினார். ஓபன் எரா கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் 1968ஆம் ஆண்டுக்கு பிறகு ஆடவர் மற்றும் மகளிர் ஒற்றையர் பிரிவில் கால் இறுதி சுற்றுக்கு முன்னதாக போட்டித் தர வரிசையில் முதல் இரு இடங்களில் உள்ள வீரர், வீராங்கனைகள் வெளியேறுவது இதுவே முதன்முறையாகும்.
இம்முறை ஆடவர் பிரிவில் ரபேல் நடால், காஸ்பர் ரூட் ஆகியோர் தொடக்க நிலையிலேயே தோல்வி அடைந்து வெளியேறி இருந்தனர். மகளிர் பிரிவில் 2ஆம் நிலை வீராங்கனையான துனிசியாவின் ஆன்ஸ் ஜபூரும் 2ஆவது சுற்றில் தோல்வி கண்டிருந்தார்.