
ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர் ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகரில் நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரின் 11ஆவது நாளான நேற்று மகளிர் ஒற்றையர் பிரிவில் நடைபெற்ற அரை இறுதி ஆட்டத்தில் 22ஆம் நிலை வீராங்கனையும், விம்பிள்டன் சாம்பியனுமான கஜகஸ்தானின் எலெனா ரைபகினா, 24ஆம் நிலை வீராங்கனையும் இரு முறை ஆஸ்திரேலிய ஓபனில் பட்டம் வென்றவருமான பெல்லாரசின் விக்டோரியா அசரங்காவை எதிர்த்து விளையாடினார்.
ஒரு மணி நேரம் 41 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் எலெனா ரைபகினா 7-6 (7-4), 6-3 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறினார். ஆஸ்திரேலிய ஓபனில் எலெனா ரைபகினா, இறுதிப் போட்டிக்கு முன்னேறுவது இதுவே முதன்முறையாகும். இதற்கு முன்னர் அதிகபட்சமாக 3ஆவது சுற்றை கடந்தது இல்லை.
இதையடுத்து நாளை நடைபெறும் இறுதிப் போட்டியில் 5ஆம் நிலை வீராங்கனையான பெல்லாரசின் சபலெங்காவுடன் பலப்பரீட்சை நடத்துகிறார் எலெனா ரைபகினா. சபலெங்கா, அரை இறுதி சுற்றில் போலந்தின் மக்டா லினெட்டுடன் மோதினார்.