ஆஸ்திரேலியன் ஓபன்: சானியா மிர்ஸா இணை அதிர்ச்சி தோல்வி!
ஆஸ்திரேலியன் ஓபன் மகளிர் இரட்டையர் பிரிவு இரண்டாம் சுற்று ஆட்டத்தில் சானியா மிர்சா - அன்னா டேனிலினா இணை அதிர்ச்சி தோல்வியை சந்தித்தது.
ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் தொடரான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் மெல்போர்னில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்ற மகளிர் இரட்டையர் பிரிவு இரண்டாவது சுற்று ஆட்டத்தில் சானியா மிர்சா ஜோடி தோல்வியைச் சந்தித்தது. கஜகஸ்தான் வீராங்கனை அன்னா டேனிலினாவுடன் இணைந்து சானியா மிர்ஸா இதில் பங்கேற்றார். பெல்ஜியம் வீராங்கனை அலிசன்-அன்ஹெலினா (உக்ரைன்) ஜோடியை சந்தித்தது சானியா ஜோடி.
பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதல் செட்டை அலிசன் இணை 6-4 என்ற கணக்கில் கைப்பற்றியது. இதையடுத்து, சுதாரித்துக் கொண்ட சானியா இணை, இரண்டாவது செட்டை 6-4 என்ற கணக்கில் கைப்பற்றி தலை நிமிர்ந்தது. இதையடுத்து, வெற்றியைத் தீர்மானிக்கும் மூன்றாவது மற்றும் கடைசி செட் ஆட்டத்தில் அனல் பறந்தது.
அந்த செட்டை அலிசன் ஜோடி, 6-2 என்ற கணக்கில் எளிதில் வசப்படுத்தி அடுத்த சுற்றுக்குள் நுழைந்தது. சானியா ஜோடி வாய்ப்பை இழந்து வெளியேறியது. அடுத்த மாதம் ஓய்வு பெறவுள்ள நிலையில் கடைசி கிராண்ட்ஸ்லாம் தொடரில் சானியா மிர்சா தோல்வி அடைந்து வெளியேறியது ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Win Big, Make Your Cricket Tales Now