
ஃபிஃபா உலகக்கோப்பை கால்பந்து தொடரில் குரூப் சுற்று போட்டிகளில் சிறப்பாக செயல்பட்ட ஆசிய அணிகளான ஆஸ்திரேலியா, ஜப்பான் மற்றும் தென் கொரியா ஆகியவை அடுத்த சுற்றான ரவுண்ட் ஆஃப் 16 சுற்றுக்கு முன்னேறின. இதில் ரவுண்ட் ஆஃப் 16 சுற்றில் ஆஸ்திரேலியா அணி அர்ஜென்டினா அணியிடம் போராடி தோல்வியடைந்தது. அதேபோல் ஜப்பான் அணி குரோஷியா அணியை வீழ்த்த கடைசி நிமிடத்திலும் போராடி பெனால்டி ஷூட் அவுட்டில் தோல்வியடைந்தது.
இந்த நிலையில் மூன்றாவது ஆசிய அணியான தென் கொரியா பிரேசில் அணிக்கு எதிரான போட்டியில் களமிறங்கியது. இந்தப் போட்டியில் காயம் காரணமாக ஓய்வில் இருந்து நட்சத்திர வீரர் நெய்மர் களம் புகுந்தார். கடந்த போட்டியில் பிரேசில் அணி கேமரூனிடம் தோல்வியை சந்தித்திருந்ததால், தென் கொரியா அணிக்கு வாய்ப்பு இருக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.
ஆனால் பிரேசில் அணியோ, அந்த காட்சியெல்லாம் இந்த ஆட்டத்தில் இல்லை என்று பதிலளிக்கும் வகையில் ஆட்டத்தின் 7ஆவது நிமிடத்திலேயே முதல் கோலை அடித்து முன்னிலை பெற்றது. இதற்கு தென் கொரியா பதிலடி கொடுக்கும் என்று கொஞ்சம் நம்பிக்கையுடன் இருந்த ரசிகர்களுக்கு பிரேசில் அணியின் நெய்மர் 13ஆவது நிமிடத்தில் அடுத்த இடியை இறக்கினார்.