ஐஎஸ்எல் 2022: பெங்களூருவை வீழ்த்தி கேரளா பிளாஸ்டர்ஸ் அபார வெற்றி!
பெங்களூரு அணிக்கெதிரான ஐஎஸ்எல் கால்பந்தாட்டத்தில் கேரளா பிளாஸ்டர்ஸ் அணி 3-2 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்று அசத்தியது.
ஐஎஸ்எல் கால்பந்து தொடரின் நடப்பாண்டு சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் கேரளா பிளாஸ்டர்ஸ் - பெங்களூரு புல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
தொடக்கம் முதலே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இரு அணிகளும் மாறிமாறி கோலடிக்க முயற்சிகளை மேற்கொண்டனர். அதன்படி ஆட்டத்தி 12ஆவது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பை சரியாக பயன்படுத்திய பெங்களூரு அணியின் கேப்டன் சுனில் சேத்ரி அதனை கோலாக மாற்றி அணியின் கோல் கணக்கை தொடங்கி வைத்தார்.
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் செயல்பட்ட கேரளா பிளாஸ்டர்ஸ் அணிக்கு மார்கோ லெஸ்கோவிக் ஆட்டத்தின் 23ஆவது நிமிடத்திலும், டிமிட்ரியோஸ் ஆட்டத்தின் 43ஆவது நிமிடத்திலும் கோலடித்து அசத்தினர். இதன்மூலம் முதல் பாதி ஆட்டநேர முடிவில் கேரளா பிளாஸ்டர்ஸ் அணி 2-1 என்ற கோல் கணக்கில் முன்னிலை வகித்தது.
இதையடுத்து நடைபெற்ற இரண்டாம் பாதி ஆட்டத்திலும் இரு அணிகளும் அட்டாக்கிங், டிஃபென்ஸ் என இரு பிரிவிலும் சிறப்பாக செயல்பட ஆட்டத்தின் பரபரப்பும் கூடியது. இதில் ஆட்டத்தின் 70ஆவது நிமிடத்தில் கேரளா அணியின் அப்போஸ்தலோஸ் ஜியானூ கோலடிக்க, 81ஆவது நிமிடத்தில் பெங்களூரு அணியின் ஜாவி கோலடித்து தோல்வியைத் தவிர்க்க போராடினார்.
ஆனால் அதன்பின் பெங்களூரு அணி மேற்கொண்ட அனைத்து முயற்சிகளையும் கேரளா டிஃபென்ஸ் பிரிவால் முறியடிக்கப்பட்டது. இதனால் ஆட்டநேர முடிவில் கேரளா பிளாஸ்டர்ஸ் அணி 3-2 என்ற கோல் கணக்கில் பெங்களூரு அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்தது.
இந்த வெற்றியின் மூலம் கேரளா பிளாஸ்டர்ஸ் அணி 18 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியளின் 4ஆம் இடத்தையும், தோல்வியடைந்த பெங்களூரு அணி 7 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியளின் 9ஆவது இடத்தையும் பிடித்தன.
Win Big, Make Your Cricket Tales Now