
ஃபிஃபா உலகக்கோப்பை கால்பந்து தொடரின் நாக் அவுட் சுற்றில் போா்ச்சுகல் அணி 6-1 என்ற கோல் கணக்கில் சுவிட்சலாந்து அணியை வீழ்த்தி காலிறுதி சுற்றுக்கு முன்னேறியது. இந்த ஆட்டத்தில் போா்ச்சுகல் நட்சத்திர வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோ, அணியின் தொடக்க வீரா்கள் பட்டியலில் இடம்பெறவில்லை. இது ரசிகா்கள் மத்தியில் அதிா்ச்சியை ஏற்படுத்தியது. அவருக்கு பதிலாக களமிறங்கிய ரமோஸ் ஹாட்ரிக் கோல்கள் அடித்து அசத்தினாா்.
முக்கியமான நாக் அவுட் போட்டியில் ரொனால்டோ களமிறங்காததற்கு குரூப் சுற்றின் கடைசி ஆட்டத்தில் தென் கொரியாவிடம் போா்ச்சுகல் அணி தோல்வியடைந்ததே முக்கிய காரணமாக பார்க்கப்பட்டது. அந்த ஆட்டத்தில் ரொனால்டோ பாதியில் வெளியேற்றப்பட்டு மாற்று வீரா் களமிறக்கப்பட்டாா். அதற்கு ரொனால்டோ அதிருப்தி தெரிவிக்க, அணியின் பயிற்சியாளா் ஃபொ்னாண்டோ சான்டோஸுக்கு கோபத்தை ஏற்படுத்தியது.
இதனால் இருவருக்கும் இடையே மோதல் போக்கு ஏற்பட, பின்னா் சமரசமானதாக சான்டோஸ் தெரிவித்தாா். இந்த நிலையில் சுவிட்சர்லாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் ரொனால்டோ தொடக்க லெவனில் சோ்க்கப்படவில்லை. அதுமட்டுமல்லாமல் நட்சத்திர வீரர் ரொனால்டோ, இதுவரை நாக் அவுட் போட்டிகளில் கோல் அடித்ததில்லை என்று காரணமும் முக்கியத்துவம் பெற்றது.