Advertisement

ஃபிஃபா உலகக்கோப்பை: மூன்றாவது இடத்தைப் பிடித்து குரோஷியா அசத்தல்!

ஃபிஃபா உலகக்கோப்பையின் மூன்றாவது இடத்திற்கான போட்டியில் மொராக்கோ அணியை 2-1 என்ற கோல் கணக்கில் குரோஷியா அணி வீழ்த்தியது.

Advertisement
Bharathi Kannan
By Bharathi Kannan December 18, 2022 • 11:14 AM
Croatia down Morocco 2-1 to secure third place at FIFA World Cup
Croatia down Morocco 2-1 to secure third place at FIFA World Cup (Image Source: Google)

ஃபிஃபா உலகக்கோப்பை கால்பந்து தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இன்று இறுதிப்போட்டி நடக்கவுள்ள நிலையில், நேற்று மூன்றாம் இடத்துக்கான ஆட்டம் நடைபெற்றது. இதில் அரையிறுதி போட்டியில் அர்ஜென்டினா அணியிடம் தோல்வியடைந்த குரோஷியா அணியும், மற்றொரு அரையிறுதியில் பிரான்ஸ் அணியிடம் தோல்வியடைந்த மொராக்கோ அணியும் மோதின.

அதுமட்டுமல்லாமல் குரோஷியா அணியின் கேப்டன் மோட்ரிச்சின் கடைசி உலகக்கோப்பை என்பதால் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு எழுந்தது. இதனிடையே ஆட்டம் தொடங்கிய முதல் நிமிடம் முதலே ஆட்டத்தில் பரபரப்ப ஏற்பட்டது. இரு அணி வீரர்களும் முதல் அடிக்க தீவிரமாக இருந்தனர். அதற்கேற்ப ஆட்டத்தின் 7ஆவது நிமிடத்தில் குரோஷியா அணிக்கு ஃபிரீ கிக் வாய்ப்பு கிடைத்தது. 

அதில் மோட்ரிக் அடித்த ஃபிரீ கிக்கில், இளம் குரோஷிய வீரர் குவார்டியோல் ஹெட்டர் மூலம் கோல் அடித்து அசத்தினார். இதன் மூலம் குரோஷியா அணி 1-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது. ஆனால் இதற்கு மொராக்கோ அணி அடுத்த நிமிடத்திலேயே பதிலடி கொடுத்தது.

அச்ரஃப் டாரி ஆட்டத்தின் 9ஆவது நிமிடத்தில் மொராக்கோ அணிக்காக முதல் கோலை அடித்து அசத்தினார். இதன் மூலம் ஆட்டத்தில் 1-1 என்ற நிலை ஏற்பட்டது. இதன் பின்னர் இரு அணி வீரர்களும் தடுப்பாட்டத்தில் எச்சரிக்கையாக விளையாடினர். இருந்தும், ஆட்டத்தின் 42ஆவது நிமிடத்தில் குரோஷியா அணியின் மிஸ்லவ் ஓர்சிக் கோல் அடித்து அசத்தினார். 

இதனால் முதல் பாதி ஆட்டநேர முடிவில் குரோஷியா அணி 2-1 என்ற கோல் கணக்கில் முன்னிலைப் பெற்றது. தொடர்ந்து நடைபெற்ற இரண்டாம் பாதி ஆட்டத்தில் இரு அணி வீரர்களும் கோல் அடிக்க தொடர் முயற்சிகளை மேற்கொண்டனர். ஆனால் மொராக்கோ அணியின் தடுப்பாட்ட வீரர்கள் குரோஷியா முன்கள வீரர்களையும், குரோஷியா அணி தடுப்பாட்ட வீரர்கள் மொராக்கோ அணியையும் தடுத்து நிறுத்தினர். 

பின் ஆட்டத்தின் 75ஆவது நிமிடத்தில் மொராக்கோ அணியின் என்நெசரி கோல் அடிக்க எடுத்த முயற்சியை, கடைசி நிமிடத்தில் குரோஷியா அணியின் குவார்டியோல் தடுத்து நிறுத்தினர். இதன்பின்னர் ஆட்டம் மேலும் பரபரப்பானது. பின்னர் 87ஆவது நிமிடத்தில் குரோஷியா அணிக்கு கோல் அடிக்க வாய்ப்பு கிடைத்தது. ஆனால் குரோஷியா வீரர் ஸ்டானிசிக் அதனைத் தவறவிட்டார். தொடர்ந்து 89ஆவது நிமிடத்தில் கிடைத்த ஃபிரீ கிக் வாய்ப்பையும் குரோஷியா அணி தவறவிட்டது.

இதனால் 90 நிமிடங்கள் முடிவடைந்தும், கூடுதலாக 6 நிமிடங்கள் வழங்கப்பட்டது. ஆனால் அந்த நேரத்திலும் எந்த கோலும் அடிக்கப்படவில்லை. இதனால் 2-1 என்ற கோல் கணக்கில் குரோஷியா அணி வெற்றிபெற்றது. இதன் மூலம் ஃபிஃபா உலகக்கோப்பைத் தொடரை குரோஷியா அணி 3ஆவது இடத்தில் முடித்துள்ளது.


Win Big, Make Your Cricket Tales Now

Advertisement
Advertisement