ஃபிஃபா உலகக்கோப்பை: பிரான்ஸுக்கு அதிர்ச்சியளித்த துனிஷியா; டென்மார்க்கை வீழ்த்தியது ஆஸ்திரேலியா!
நடப்பு சாம்பியனான பிரான்ஸ் அணியை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியும், துனிஷியா அணி உலகக்கோப்பைத் தொடரில் இருந்து வெளியேறியுள்ளது.
ஃபிஃபா உலகக்கோப்பை கால்பந்து தொடரில் நடப்பு சாம்பியனான பிரான்ஸ் அணியை எதிர்த்து துனிஷியா அணி மோதியது. ஏற்கனவே பிரான்ஸ் அணி அடுத்த சுற்றுக்கு முன்னேறியதால், நட்சத்திர வீரர்களான எம்பாப்பே மற்றும் கிரீஸ்மேன் ஆகியோர் தொடக்கத்தில் களமிறங்கவில்லை.
அதேபோல் துனிஷியா அணி பிரான்ஸ் அணியை வீழ்த்தினால், ரவுண்ட் ஆஃப் 16 சுற்றுக்கு முன்னேற வாய்ப்பு இருந்தது. இதனால் இந்த ஆட்டம் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்த நிலையில் ஆட்டம் தொடங்கிய 8வது நிமிடத்திலேயே துனிஷியா அணியின் கான்த்ரி முதல் கோல் அடித்தார்.
ஆனால் அதனை நடுவர்கள் ஆஃப் சைடாக அறிவித்து கோலை திரும்ப பெற்றனர். தொடக்கம் முதலே துனிஷியா அணி அட்டாக் செய்ததோடு, தடுப்பாட்டத்திலும் சிறப்பாக செயல்பட்டது. அதேபோல் பிரான்ஸ் அணியின் தடுப்பாட்டமும் சிறப்பாக இருந்தது. இதனால் முதல் பாதி ஆட்டத்தில் எந்த கோலும் அடிக்கப்படவில்லை.
இதனைத் தொடர்ந்து இரண்டாம் பாதி ஆட்டம் தொடங்கியதில் இருந்து, துனிஷியா அணி வீரர்கள் அட்டாக் மேல் அட்டாக் செய்தனர். இதன் பலனாக 59ஆவது நிமிடத்தில் துனிஷியா அணியின் காஸ்ரி முதல் கோலை அடித்து அசத்தினார். இதன் மூலம் துனிஷியா 1-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது. இதனைத் தொடர்ந்து பிரான்ஸ் நட்சத்திர வீரர் எம்பாப்பே களமிறக்கப்பட்டார். இதனால் பிரான்ஸ் அணி தரப்பில் விரைந்து பதிலடி கொடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இரண்டாம் பாதி ஆட்ட நேரத்தில் கூடுதலாக 13 நிமிடங்கள் வழங்கப்பட்ட நிலையில், பிரான்ஸ் அணியின் க்ரீஸ்மேன் கோல் அடித்தார். ஆனால் அது நடுவர்களால் திரும்ப பெறப்பட்டது. இதன் மூலம் நடப்பு சாம்பியனான பிரான்ஸ் அணியை 1-0 என்ற கோல் துனிஷியா அணி வீழ்த்தியது. இருப்பினும் துனிஷியா அணி அடுத்த சுற்றுக்கு முன்னேறவில்லை.
இதேபோல் மற்றொரு ஆட்டத்தில் ஆஸ்திரேலியா - டென்மார்க் அணிகள் மோதின. இதில் வெற்றிபெறும் அணி அடுத்த சுற்றுக்கு முன்னேறும் என்பதால், இரு அணி வீரர்களும் தொடக்கம் முதலே சிறப்பாக விளையாடினர்.
முதல் பாதி ஆட்டத்தில் எந்த கோலும் அடிக்கப்படாத நிலையில், 60ஆவது நிமிடத்தில் ஆஸ்திரேலிய அணியின் மேத்யூ லெக்கி முதல் கோல் அடித்து அசத்தினார். இதன்பின்னர் எந்த கோலும் அடிக்கப்படாததால், ஆஸ்திரேலிய அணி 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது. இந்த வெற்றியின் மூலம் ஆஸ்திரேலிய அணி உலகக்கோப்பை தொடரின் அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
Win Big, Make Your Cricket Tales Now