டென்னிஸ் வரலாற்றில் மாபெரும் சாதனை நிகழ்த்டிய ஜோகோவிச்!
டென்னிஸ் தரவரிசையில் அதிக வாரங்களுக்கு நம்பர் 1 இடத்தைத் தக்கவைத்துக் கொண்ட வீரர் என்கிற சாதனையை செர்பியாவின் நோவாக் ஜோகோவிச் படைத்துள்ளார்.
ஆடவா் ஒற்றையரில் 22 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ளார் செர்பியாவைச் சேர்ந்த ஜோகோவிச். சமீபத்தில் நடைபெற்ற ஆஸ்திரேலிய ஓபன் தொடரிலும் சாம்பியன் பட்டத்தை வென்றார். கடந்த மார்ச் 2021ஆம் ஆண்டில் நம்பர் 1 வீரராக 310 வாரங்களுக்கு நீடித்த ஃபெடரரின் சாதனையை முறியடித்தார் ஜோகோவிச்.
தற்போது, ஏடிபி தரவரிசையில் முதல் இடத்தில் 377 வாரங்களாக இருந்த ஸ்டெஃபானி கிராஃபின் சாதனையையும் முறியடித்துள்ளார். இதன்மூலம் ஆடவர், மகளிர் என இரு தரப்பிலும் அதிக வாரங்கள் முதலிடத்தில் இருந்த வீரர் என்கிற சாதனையை அவர் படைத்துள்ளார்\.
முன்னதாக கடந்த 2011ஆம் ஆண்டில் 24 வயதில் முதல்முறையாக நம்பர் 1 வீரராக ஆனார் ஜோகோவிச். ஜூலை 7, 2014 முதல் நவம்பர் 6, 2016 வரை தொடர்ச்சியாக நெ1 வீரராக இருந்தார். தற்போது மேலும் மற்றொரு சாதனையைப் படைத்து தன்னுடைய ஆதிக்கத்தை நிலைநாட்டியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தரவரிசையில் அதிக வாரங்களுக்கு நம்பர் 1 இடத்தில் இருந்த வீரர்கள்
- ஜோகோவிச் - 378 வாரங்கள்
- கிராஃப் - 377 வாரங்கள்
- நவரத்திலோவா - 332 வாரங்கள்
- செரீனா வில்லியம்ஸ் - 319 வாரங்கள்
- ஃபெடரர் - 310 வாரங்கள்
Win Big, Make Your Cricket Tales Now