
இணையவழி கல்வி கற்பிக்கும் நிறுவனமான பைஜுஸ் 2011இல் தொடங்கப்பட்டது. கேரளாவைச் சேர்ந்த பைஜு ரவீந்திரனால் தொடங்கப்பட்ட இந்நிறுவனம் பெங்களூருவைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வருகிறது. இந்நிலையில் ஆர்ஜெண்டினாவைச் சேர்ந்த பிரபல கால்பந்து வீரர் மெஸ்ஸி, பைஜுஸ் நிறுவனத்தின் சர்வதேச அளவிலான விளம்பரத் தூதராக நியமிக்கப்பட்டுள்ளார். அனைவருக்குமான கல்வி என்கிற திட்டத்தின் தூதராக மெஸ்ஸி செயல்படுவார் என பைஜுஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. கத்தாரில் நடைபெறவுள்ள கால்பந்து உலகக் கோப்பைப் போட்டியின் விளம்பரதாரராகவும் பைஜுஸ் நிறுவனம் செயல்படவுள்ளது.
பாரிஸ் செயின்ட் ஜெர்மெயின் அணி மற்றும் அர்ஜென்டினா கால்பந்து அணிக்காக விளையாடிவரும் மெஸ்ஸி பைஜூஸ் ஒப்பந்த்தில் கையொப்பமிட்டு சமச்சீர் கல்விக்கான காரணத்தை ஊக்கப்படுத்த உள்ளார் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. கல்வி அனைவருக்கும் அணுகக்கூடியதாகவும், சமமானதாகவும் மற்றும் குறைந்த விலையில் வழங்குவதற்கு சர்வதேச அளவில் பைஜூஸ் நிறுவனம், உலகின் பிரபலமான கால்பந்து வீரரான மெஸ்ஸியுடன் இணைந்து கால் பதிக்கிறது.
இதுகுறித்து பேசிய லியோனல் மெஸ்ஸி கூறுகையில் “ கற்றலை அனைவரும் காதலிக்க முடியும் என்ற கருத்தை வலியுறுத்தும் எனது நோக்கத்துடன் பைஜூஸின் நோக்கமும் ஒத்திருக்கிறது என்பாதால், பைஜூஸுடன் நான் ஒப்பந்தம் செய்தேன். உயர்தர கல்வி வாழ்க்கையை மாற்றுகிறது, உலகளவில் லட்சக்கணக்கான மாணவர்களின் வாழ்க்கைப் பாதைகளை பைஜூஸ் மாற்றியுள்ளது. இளம் கற்கும் மாணவர்களை முதலிடத்தை அடைய ஊக்குவிப்பேன் என்று நம்புகிறேன்” எனத் தெரிவித்தார்