
உலகக்கோப்பை கால்பந்து தொடரில் அர்ஜென்டினா, குரோஷியா மோதும் அரையிறுதி போட்டி தோஹாவில் உள்ள லூசெயில் ஐகானிக் மைதானத்தில் இந்திய நேரப்படி இன்று நள்ளிரவு 12.30 மணிக்கு தொடங்குகிறது. லியோனல் மெஸ்ஸியின் உலகக்கோப்பை கனவு நிறைவேறுமா? லூகா மோட்ரிக் புதிய வரலாறு படைப்பாரா? என கால்பந்து ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
கடைசியாக 2014ஆம் ஆண்டு நடந்த உலகக்கோப்பை தொடரில் இறுதிப் போட்டி வரை அர்ஜென்டினா சென்றிருந்தது. அதில் 1-0 என ஜெர்மனி உடன் தோல்வியை தழுவி கோப்பையை நழுவ விட்டது. அதற்கு முன்பு 1986ஆம் ஆண்டு அர்ஜென்டினா தனது இரண்டாவது உலகக்கோப்பையை கைப்பற்றியது. அப்போது டியகோ மாரடோனா தனி ஒருவனாய் போராடி இருப்பார். இதேபோல் இம்முறை வெற்றிக் கனி பறிக்க மெஸ்ஸி முக்கிய பங்கு வகிப்பாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
நடப்பு தொடரில் மெஸ்ஸி கோல் அடிப்பதை காட்டிலும் மற்றவர்கள் கோல் அடிக்க பல்வேறு வாய்ப்புகளை உருவாக்கி கொடுத்திருக்கிறார். இதனால் ஒன்றுபட்ட அணியாக கைகோர்த்து தங்கள் இலக்கை நோக்கி விளையாடி வருகின்றனர். 2022 உலகக்கோப்பை தொடரில் 5 போட்டிகளில் 4 கோல்கள் அடித்து கோல்டன் பூட் விருதுக்கான ரேஸில் எம்பாப்பேவிற்கு அடுத்த இடத்தில் இருக்கிறார் மெஸ்ஸி.