
உலகக்கோப்பை கால்பந்து தொடரின் நடப்பு சீசன் கத்தாரில் நவம்பர் 20ஆம் தேதி முதல் டிசம்பர் 18ஆம் தேதி வரை நடைபெறுகிறது. தோஹாவைச் சுற்றியுள்ள 8 மைதானங்களில் 64 போட்டிகள் நடைபெறவுள்ளன. 2022 கால்பந்து உலகக் கோப்பை தொடரில் 32 அணிகள் பங்கேற்கின்றன. நவம்பர் 20 அன்று தொடக்க ஆட்டத்தில் கத்தார் - ஈகுவடார் அணிகள் மோதுகின்றன.
நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் ஃபிஃபா சர்வதேசக் கால்பந்து கூட்டமைப்பால் நடத்தப்படுகிறது. ஃபிஃபா 21ஆவது உலகக் கோப்பை கால்பந்து போட்டி 2018இல் ரஷியாவில் முதல்முறையாக நடைபெற்றது. தரவரிசையில் 7ஆவது இடத்தில் இருந்த பிரான்ஸ் அணி குரோஷியாவை 4-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி உலகக் கோப்பையை வென்றது.
இந்நிலையில் கேரளாவில் கால்பந்து உலகக் கோப்பைப் போட்டியை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கிறார்கள். கோழிக்கோட்டில் உள்ள ஆற்றில் நெய்மர், கிறிஸ்டியானோ ரொனால்டோ, லியோனல் மெஸ்ஸியின் கட்அவுட்களை அவர்களுடைய ரசிகர்கள் வைத்துள்ளார்கள். இதன் புகைப்படத்தை ட்விட்டரில் வெளியிட்டு கேரள ரசிகர்களின் கால்பந்து ஆர்வத்தைப் பாராட்டியுள்ளது ஃபிஃபா அமைப்பு.