
கத்தாரில் பிரேசிலின் நட்சத்திர வீரர் நெய்மர் அழுததை யாராலும் மறக்க முடியாது. தோல்வி எந்த அளவிற்கு அவரை வாட்டி எடுத்தது என்பதை உலக கால்பந்து ரசிகர்கள் கண்கூடாக பார்த்தனர். அவரை தேற்றுவதற்கு சக வீரரான டேனி ஆல்வ்ஸ் அருகிலேயே நீண்ட நேரம் நின்றிருந்தார். ஆனால் விளையாட்டில் வெற்றி, தோல்விகளை ஏற்றுக் கொண்டு தான் ஆக வேண்டும். கூடுதல் நேரம் முடிந்தும் 1-1 என்ற ட்ராவில் இருந்ததால் பெனால்டி ஷூட்-அவுட் நடத்தப்பட்டது.
அதில் 4-2 என குரோஷியா வெற்றி பெற்று அரையிறுதிக்கு தகுதி பெற்றது. பெனால்டி ஷூட்-அவுட்டில் நெய்மர் ஐந்தாவதாக பெனால்டி அடிக்கும் வகையில் பயிற்சியாளர் டைட் வியூகம் வகுத்திருந்தார். ஆனால் அந்த பெனால்டி வருவதற்குள் ஆட்டமே முடிந்து வெற்றி குரோஷிய அணி வீரர்களின் கைகளுக்கு சென்றுவிட்டது. இதனால் டைட்டின் பெனால்டி ஷூட்-அவுட் திட்டம் பெரும் சர்ச்சையானது.
அவரை பலரும் திட்டி தீர்த்தனர். இந்நிலையில் நெய்மரை ஆறுதல்படுத்த வந்த குரோஷிய நட்சத்திர வீரர் லூகா மோட்ரிக் அவருடன் உறையாடிக்கொண்டிருந்தார். அப்போது குரோஷிய அணி வீரர் லியோ பெரிசிக்கின் மகன் மைதானத்திற்குள் ஓடிவந்து நெய்மருக்கு ஆறுதல் சொன்ன காணொளி வைரலாகி நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.