ஃபிஃபா உலகக்கோப்பை 2022: பரபரப்பான ஆட்டத்தில் கனடாவை வீழ்த்தியது பெல்ஜியம்!
கனடா அணிக்கு எதிரான ஃபிஃபா உலகக்கோப்பை கால்பந்து தொடரின் லீக் போட்டியில் பெல்ஜியம் அணி 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது.
ஃபிஃபா கால்பந்து உலகக்கோப்பைத் தொடரில் குரூப் எஃப் பிரிவில் உல்ள பெல்ஜியம் அணியை எதிர்த்து கனடா அணி விளையாடியது. தனித்திறமையாளர்கள் அதிகம் உள்ள பெல்ஜியம் அணிக்கு கனடா அணி சவால் அளிக்குமா என்ற எதிர்பார்ப்பு இருந்தது.
இதனைத் தொடர்ந்து ஆட்டம் தொடங்கிய 10வது நிமிடத்திலேயே கனடா அணிக்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. அந்த பெனால்டியில் கனடா அணியின் முக்கிய வீரர் டேவிஸ் அடித்த பந்தை, பெல்ஜியம் அணியின் கோர்டோயிஸ் சரியாக கணித்து தடுத்தார். இருந்தும் அடுத்த சில நிமிடங்களில் கனடா அணி கோல் அடிக்கும் வாய்ப்பை உருவாக்கிக் கொண்டே இருந்தது. கிட்டத்தட்ட முதல் 17 நிமிடங்களில் மட்டுமே பெல்ஜியம் அணியின் ஃபாக்ஸிற்குள் கனடா அணி 12 முறை பந்தை கொண்டு வந்தது. இருந்தும் கனடாவின் தாக்குதலை பெல்ஜியம் அணி தொடர்ந்து தடுத்தது.
தொடர்ந்து இரு அணிகளும் சரிக்கு சமமாக களத்தில் மோதிக்கொண்டே இருந்தன. இறுதியாக 44ஆவது நிமிடத்தில் பெல்ஜியம் அணியின் மிச்சி பேட்சுவாய் முதல் கோலை அடித்து அசத்தினார். இதன் மூலம் முதல் பாதி ஆட்ட நேர முடிவில் பெல்ஜியம் அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. முதல் பாதியில் இரு அணிகளும் சம பலத்துடன் மோதியதால், இரண்டாம் பாதி ஆட்டம் ரசிகர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது.
தொடர்ந்து இரண்டாம் பாதி ஆட்டத்தின் தொடக்கம் முதலே கனடா - பெல்ஜியம் அணி வீரர்கள் அதிகமாக அட்டாக்கிங் பாணியில் விளையாடினர். பெல்ஜியம் அணியின் அட்டாக்கை கனடா அணி கவுன்ட்டர் அட்டாக் செய்ய, கனடா அணியின் அட்டாக்கை பெல்ஜியம் அணி கவுன்ட்டர் அட்டாக் செய்ய என்று ஆட்டம் சூடுபிடித்தது. அதேபோல் கனடா அணியின் தாக்குதலை, பெல்ஜியம் அணி அனுபவம் மூலம் தொடர்ந்து தடுத்து நிறுத்திக் கொண்டே இருந்தது.
தொடர்ந்து இரண்டாம் பாதியில் கனடா அணி தொடர்ந்து முயற்சித்தும், கடைசி நேரத்தில் தொடர்ந்து சொதப்பி வந்தது. அதுமட்டுமல்லாமல் பெல்ஜியம் அணியின் கோல்கீப்பர் கோர்டோயிஸை தகர்க்க, கனடா அணி கடைசி வரை போராடியது. ஆனால் கடைசி வரை ஒரு கோல் கூட அடிக்க முடியவில்லை. இறுதியாக இரண்டாம் பாதி முடிவில் பெல்ஜியம் அணி 1-0 என்ற கோல் கணக்கில் கனாடா அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது.
Win Big, Make Your Cricket Tales Now