
ஃபிஃபா உலகக்கோப்பை கால்பந்து தொடர் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. காலிறுதி போட்டிகள் தொடங்கியுள்ள நிலையில், ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்த நிலையில் உலகக்கோப்பைத் தொடரை வெற்றிபெறும் என்று கணிக்கப்பட்ட பிரேசில் அணியை எதிர்த்து குரோஷியா அணி விளையாடியது. இதில் தொடக்கம் முதலே பிரேசில் அணி அட்டாக் மேல் அட்டாக் செய்தது.
இருப்பினும் 90 நிமிடங்கள் வரை இரு அணிகளும் கோல் எதுவும் அடிக்கவில்லை. இதனால் 30 நிமிடங்கள் கூடுதல் நேரம் வழங்கப்பட்டது. இந்த கூடுதல் நேரத்தின் முதல் பாதியின் இறுதி நிமிடத்தில் பிரேசில் அணியின் நட்சத்திர வீரர் நெய்மர் அசாத்திய கோல் ஒன்றை அடித்து முன்னிலை ஏற்படுத்தினார்.
இதன் பின்னர் பிரேசில் வீரர்கள் சிறிது அசால்ட்டாக விளையாட, குரோஷியா அணி 116ஆவது நிமிடத்தில் பதிலடி கொடுத்தது. யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் குரோஷியா அணியின் ப்ரூனோ பெட்கோவிச் கோல் அடித்து ஆட்டத்தில் சமநிலை ஏற்படுத்தினார். இதனால் வெற்றியாளரை தீர்மானிக்கும் வகையில் பெனால்டி ஷூட் அவுட் முறை கடைபிடிக்கப்பட்டது.