
ஃபிஃபா உலகக்கோப்பை கால்பந்து தொடரில் ஜப்பான் அணி முன்னாள் சாம்பியன் அணிகள் அங்கம் வகிக்கும் ஸ்பெயின் மற்றும் ஜெர்மனி அணிகள் இருக்கும் குரூப்பில் இடம்பெற்றது. இதனால் ஜப்பான் அணி குரூப் சுற்றோடு வெளியேற்றப்படும் என்றே ரசிகர்கள் கருதினர். ஆசிய அணிகளில் ஒன்றான ஜப்பான் 1994ஆம் ஆண்டு முதல் ஃபிஃபா உலகக்கோப்பைத் தொடர்களில் பங்கேற்று வந்தாலும், அதிகபட்சமாக ரவுண்ட் ஆஃப் 16 சுற்றுக்கு மட்டுமே முன்னேறியுள்ளது.
ஆனால் ஜப்பான் அணி முதல் போட்டியில் ஜெர்மனியையும், கடைசி போட்டியில் ஸ்பெயின் அணியை வீழ்த்தி ரசிகர்களுக்கு ஆச்சரியம் கொடுத்தனர். தொடர்ந்து காலிறுதிக்கு முந்தைய நாக் அவுட் சுற்றில் குரோஷியா அணியை எதிர்த்து ஜப்பான் இன்று விளையாடியது. இதில் தொடக்கம் முதலே இரு அணி வீரர்களும் கோல் அடிக்க முயற்சித்தனர்.
இந்த நிலையில் ஆட்டத்தின் 43ஆவது நிமிடத்தில் ஜப்பான் அணியின் டைசென் மெய்டா முதல் கோல் அடித்து அசத்தினார். இதன் மூலம் ஜப்பான் அணி 1-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது. தொடர்ந்து இரண்டாம் பாதியில் கோல் அடிக்க வேண்டிய கட்டாயத்தோடு குரோஷிய வீரர்கள் களமிறங்கினர்.