
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஃபிஃபா உலகக்கோப்பை கால்பந்து 2022 தொடர் கத்தாரில் நேற்று தொடங்கியது. உலகக்கோப்பையை நடத்தும் அணி தனது முதல் போட்டியில் இதுவரை தோற்றதே இல்லை. அந்த வரலாற்றை திருத்தி எழுதியிருக்கிறது கத்தார்.
அதன்படி நேற்று நடைபெற்ற முதல் போட்டியில் கத்தார் - ஈக்வடார் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இந்த ஆட்டத்தின் 5, 15, 31 ஆகிய நிமிடங்களில் மொத்தம் 3 கோல்கள் அடிக்கப்பட்டன. இந்த மூன்று கோலையும் அடித்தவர் ஈக்வடார் கேப்டன் என்னர் வேலன்சியா. ஆனால் இதில் முதல் கோல் ஆஃப்சைடு என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் அடுத்த இரண்டையும் வேலன்சியா பக்காவாக கோலாக மாற்றிக் காட்டினார். அதிலும் ஆட்டத்தின் 15ஆவது நிமிடத்தில் பாக்ஸுக்குள் நுழைந்த வேலன்சியாவின் கால்களை கத்தார் கோல்கீப்பர் அல்ஷீப் தட்டி விட மஞ்சள் அட்டை உடன் பெனால்டியும் வழங்கப்பட்டது.
அதை மிக எளிதாக வேலன்சியா கோலாக்கினார். அதன்பின் ஆட்டத்தின் 31ஆவது நிமிடத்தில் ரைட் விங்கில் இருந்து ஏஞ்சலோ பிரசியடோ பாக்ஸுக்குள் பாலை தட்டி விட, அதை ஹெட்டர் மூலம் வேலன்சியா கோலாக மாற்றினார். இதனால் மஞ்சள் நிற படை மைதானம் முழுவதும் ஆர்ப்பரிக்க ஈக்வடார் வெற்றி வாசலுக்குள் நுழைந்தது. இதில் ஆச்சரியப்படும் விஷயம் என்னவென்றால் உலகக்கோப்பை தொடரில் ஈக்வடார் சார்பில் அடிக்கப்பட்ட கடைசி 5 கோல்களும் என்னர் வேலன்சியா அடித்தது.