ஃபிஃபா உலகக்கோப்பை: போலந்தை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது ஃபிரான்ஸ்!
ஃபிஃபா கால்பந்து உலக கோப்பையில் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் போலந்து அணியை 3-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி ஃபிரான்ஸ் அணி காலிறுதிக்கு முன்னேறியது.
22ஆவது ஃபிஃபா கால்பந்து உலக கோப்பை தொடர் கத்தாரில் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. லீக் சுற்று முடிந்து காலிறுதிக்கு முந்தைய சுற்று போட்டிகள் நடந்துவருகின்றன.
முதல் சுற்றில் சிறப்பாக விளையாடிய பிரேசில், அர்ஜெண்டினா, போர்ச்சுகல், ஃபிரான்ஸ், ஜப்பான், ஸ்பெய்ன், நெதர்லாந்து, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, போலந்து, இங்கிலாந்து, செனகல், குரோஷியா, தென் கொரியா, மொராக்கோ, சுவிட்சர்லாந்து ஆகிய 16 அணிகளும் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு தகுதிபெற்றன.
காலிறுதிக்கு முந்தைய சுற்றின் முதல் போட்டியில் அமெரிக்க அணியை வீழ்த்தி நெதர்லாந்தும், அடுத்த போட்டியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி அர்ஜெண்டினாவும் காலிறுதிக்கு முன்னேறின.
அதன்படி நேற்று இந்திய நேரப்படி இரவு 8.30 மணிக்கு தொடங்கி நடந்த போட்டியில் ஃபிரான்ஸும் போலந்தும் மோதின. இந்த போட்டியில் 44வது நிமிடத்தில் ஃபிரான்ஸ் வீரர் ஆலிவியர் முதல் கோல் அடித்தார்.
அதன்பின்னர் ஆட்டத்தின் 2ம் பாதியில் ஃபிரான்ஸின் நட்சத்திர இளம் வீரர் கிலியன் எம்பாப்பே 2 கோல்களை அடிக்க, ஆட்டம் முடியும் தருவாயில் போலந்து அணி ஒரு கோல் அடித்தது. எனவே 3-1 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்ற நடப்பு சாம்பியன் ஃபிரான்ஸ் அணி, காலிறுதிக்கு முன்னேறியுள்ளது.
Win Big, Make Your Cricket Tales Now