ஃபிஃபா உலகக்கோப்பை 2022: சாதனைகளை குவித்து வரும் லியோனல் மெஸ்ஸி!
ஃபிஃபா உலகக்கோப்பை கால்பந்து போட்டிகளில் அர்ஜென்டினா அணிக்காக அதிக கோல்கல் அடித்த வீரர் என்ற சாதனையை நட்சத்திர வீரர் லியோனல் மெஸ்ஸி படைத்துள்ளார்.
22ஆவது ஃபிஃபா கால்பந்து உலகக்கோப்பை தொடர் கத்தாரில் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. காலிறுதி போட்டிகள் முடிவடைந்து அரையிறுதி போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற முதல் அரையிறுதிப்போட்டியில் அர்ஜென்டினா - குரோஷியா அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
இப்போட்டியின் முடிவில் அர்ஜென்டினா அணி 3-0 என்ற கோல் கணக்கில் குரோஷியா அணியை வீழ்த்தி, 6ஆவது முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறி அசத்தியுள்ளது.
இதனிடையே நடப்பு உலகக்கோப்பையில் அர்ஜென்டினா அணியின் நட்சத்திர வீரர் லயோனல் மெஸ்ஸி பல்வேறு சாதனைகளை படைத்து வருகிறார். இதுவரை 5 உலகக்கோப்பைத் தொடரில் விளையாடியுள்ள லியோனல் மெஸ்ஸி, நாக் அவுட் போட்டிகளில் கோல் அடித்ததே இல்லை என்ற விமர்சனம் இருந்தது. இது மெஸ்ஸியின் கால்பந்து வரலாற்றில் கரும்புள்ளியாகவே இருந்து வந்தது. ஒவ்வொரு முறையும் மெஸ்ஸி முக்கிய போட்டிகளில் சிறப்பாக விளையாட மாட்டார் என்று விமர்சிக்கப்பட்டு வந்தது.
இந்த விமர்சனங்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், நாக் அவுட் போட்டியில் முதல்முறையாக கோல் அடித்து மெஸ்ஸி அசத்தினார். இதனைத் தொடர்ந்து நெதர்லாந்து அணிக்கு எதிரான காலிறுதி போட்டியில் இன்னொரு கோல் அடித்தார். இதன் மூலம் உலகக்கோப்பையில் அதிக கோல்கள் அடித்த அர்ஜென்டினா வீரர்கள் வரிசையில் கேப்ரியல் பாடிஸ்டுடாவின் 10 கோல்கள் சாதனையை சமன் செய்தார்.
இந்த நிலையில் குரோஷியா அணிக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில் 34வது நிமிடத்தில் அர்ஜென்டினா அணிக்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. ஏற்கனவே பெனால்டி வாய்ப்புகளில் மெஸ்ஸி சொதப்பி இருப்பதால், அந்த அணியின் கோல்கீப்பரான மார்டினஸ் கூட பார்க்க முடியாமல் திரும்பி நின்றிருந்தார்.
ஆனால் மெஸ்ஸி எதையும் பற்றியும் கவலைப்படாமல் கோல் போஸ்டின் டாப் கார்னருக்கும் வேகமாக பந்தை தள்ளினார். இதனை தடுக்க குரோஷியா கோல்கீப்பர் லிவாகோவிச்சுக்கு எந்த வாய்ப்பும் கிடைக்கவில்லை. இதன்மூலம் அர்ஜென்டினா அணிக்காக உலகக்கோப்பை தொடரில் அதிக கோல்கள் அடித்தவர்கள் பட்டியலில் லயோனல் மெஸ்ஸி முதலிடம் பிடித்தார்.
அதேபோல் அரையிறுதிப் போட்டியில் களமிறங்கியதன் மூலம் 25ஆவது உலகக்கோப்பை போட்டிகளில் களமிறங்கினார். இதன் மூலம் அதிக உலகக்கோப்பை போட்டிகளில் விளையாடிய வீரர் என்ற ஜெர்மனியின் லோதர் மாத்தஸ் சாதனையை மெஸ்ஸி சமன் செய்துள்ளார். அதேபோல் மிக அதிக வயதில் உலகக்கோப்பைத் தொடரில் கோல் அடித்த வீரர் என்ற சாதனையையும் மெஸ்ஸி படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Win Big, Make Your Cricket Tales Now