ஃபிஃபா உலகக்கோப்பை: வெற்றிபெற்றும் தொடரிலிருந்து வெளியேறும் உருகுவே!
கானா அணியை 2-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியும் இருமுறை உலகக்கோப்பை சாம்பியன் அணியான உருகுவே தொடரில் இருந்து வெளியேறியுள்ளது.
கடந்த 2010இல் நடைபெற்ற ஃபிஃபா உலகக்கோப்பை கால்பந்து தொடரின் காலிறுதி போட்டியில் கானா - உருகுவே அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தை யாரும் அவ்வளவு எளிதாக மறந்திருக்க முடியாது. கானா அணி முன்னிலை பெறும் நேரத்தில் அடித்த கோலை, உருகுவே அணி வீரர் சுவாரஸ் கைகளால் தடுத்து நிறுத்தினார். இதனால் அவருக்கு ரெட் கார்ட் வழங்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து பென்லாடி ஷூட் அவுட் வாய்ப்பில் வெற்றிபெற்று உருகுவே அணி அரையிறுதிக்கு முன்னேறியது. கானா அணி பெனால்டி வாய்ப்பில் கோல் அடிக்க முடியாததை பெஞ்ச்சில் அமர்ந்து சுவாரஸ் கொண்டாடி கொண்டு இருந்தார். அன்று முதல் ஹேண்ட் ஆஃப் தி டெவில் என்று வாக்கியம் கால்பந்தில் உருவாகியது.
இதற்கு பதிலடி கொடுக்க கானா அணி சுமார் 12 ஆண்டுகளாக காத்திருக்கிறது. அதற்கேற்ப உலகக்கோப்பை குரூப்-ல் கானா, உருகுவே அணிகள் ஒன்றாக இருந்தன. இதனால் உலகக்கோப்பைத் தொடர் தொடங்கிய நாளில் இருந்தே கானா - உருகுவே அணிகளுக்கு இடையிலான ஆட்டத்திற்கு பெரிய எதிர்பார்ப்பு இருந்தது.
இந்த நிலையில் இதுவரை நடைபெற்ற 2 போட்டிகளில் உருகுவே அணி ஒரு தோல்வி, ஒரு டிராவுடன் வெற்றிபெற வேண்டிய கட்டாயத்தில் கானா அணிக்கு எதிராக இன்றைய போட்டியில் களமிறங்கியது. மறுபக்கம் கானா அணி ஒரு வெற்றி, ஒரு தோல்வியுடன் உருகுவேவை வீழ்த்தி பழிதீர்க்க களமிறங்கியது. ஆட்டம் தொடங்கியதில் இருந்தே இருநாட்டு ரசிகர்களும் உணர்ச்சியை வெளிப்படுத்தி வந்தனர்.
முதல் பாதி ஆட்டம் முதலே இரு அணி வீரர்களும் ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதனிடையே ஆட்டத்தின் 18ஆவது நிமிடத்தில் கானா அணிக்கு பெனால்டி கிடைத்தது. அந்த பெனால்டி வாய்ப்பு கிடைத்தபோதே, பார்வையாளர்களின் மனம் 2010க்கு சென்றது என்றே கூறலாம். உருகுவேவுக்கு கானா பெனால்டி மூலம் பதிலடி கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஆண்ட்ரே கோல் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். உருகுவே அணியின் கோல்கீப்பர் சிறப்பாக பென்லாடியை தடுத்தார்.
இதன் பின்னர் முழுக்க முழுக்க உருகுவே அணி ஆதிக்கம் செலுத்த தொடங்கியது. ஆட்டத்தின் 26ஆவது நிமிடத்தில் உருகுவே அணியின் ஜியார்ஜியன் முதல் கோல் அடித்து அசத்தினார். இதன் மூலம் உருகுவே அணி முன்னிலை பெற, 32ஆவது நிமிடத்தில் இரண்டாவது கோலை அடித்தது. இதையும் ஜியார்ஜியனே அடித்து அசத்தினார். இந்த இரு கோல்களுக்கும் உருகுவே அணியின் சீனியர் வீரரான சுவாரஸ் அசிஸ்ட் செய்திருந்தார்.
முதல் பாதியில் வேறு எந்த கோலும் அடிக்கப்படாத நிலையில், இரண்டாம் பாதியிலாவது கானா அணி எழுச்சி பெறுமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டது. இரண்டாம் பாதி ஆட்டத்தில் கானா அணி வீரர்கள் கோல் அடிக்க ஏராளமான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது. ஆனால் 80 நிமிடங்கள் கடந்தும் கானா அணி எந்த கோலும் அடிக்கப்படவில்லை.
இதனிடையே இதே குரூப்பில் உள்ள தென் கொரியா அணி போர்ச்சுகல் அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது. இதனால் உருகுவே அணி அடுத்த சுற்றுக்கு முன்னேற இன்னொரு கோல் அடிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இதனால் மைதானத்திலேயே உருகுவே அணி ரசிகர்கள் விரக்தியை வெளிப்படுத்த தொடங்கினர்.
அதேபோல் இன்னொரு கோல் அடிக்க வேண்டும் என்பதை உணர்ந்து உருகுவே அணி வீரர்கள் கோல் அடிக்க எடுத்த முயற்சிகள் கானா அணி தடுப்பாட்ட வீரர்களால் தடுக்கப்பட்டது. இரண்டாம் பாதி ஆட்ட நேரம் முடிவடைந்த நிலையில், கூடுதலாக 8 நிமிடங்கள் வழங்கப்பட்டது. ஆனால் அந்த 8 நிமிடங்களிலும் உருகுவே அணியால் கோல் அடிக்க முடியவில்லை. இதனால் ஆட்டம் நேர முடிவில் 2-0 என்ற கோல் கணக்கில் கானா அணியை உருகுவே அணி வீழ்த்தியது.
இருந்தும் 2 முறை சாம்பியனான உருகுவே அணியும், கானா அணியும் உலகக்கோப்பைத் தொடரில் இருந்து வெளியேறியுள்ளன. குரூப் எச் பிரிவில் இருந்து போர்ச்சுகல் மற்றும் தென் கொரியா அணிகள் அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளன. இதன் மூலம் ரவுண்ட் ஆஃப் 16 சுற்றுக்கு முன்னேறியுள்ள மூன்றாவது ஆசிய அணியாக தென் கொரியா உருவெடுத்துள்ளது.
Win Big, Make Your Cricket Tales Now