
போர்ச்சுகல் கால்பந்து அணியின் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ மான்செஸ்டர் யுனைடெட் கிளப் அணிக்காக ஒப்பந்தமாகி விளையாடி வந்தார். இந்நிலையில், தொலைக்காட்சி நேர்காணல் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ரொனால்டோ, மான்செஸ்டர் யுனைடெட் கிளப் அணியின் உரிமையாளர்கள் மற்றும் மேலாளர் எரிக் டென் ஹாக் ஆகியோரை கிண்டல் செய்ததை அடுத்து அவரது ஒப்பந்தத்தை ரத்து செய்தது.
இதையடுத்து கத்தாரில் நடைபெற்ற ஃபிஃபா உலகக் கோப்பை கால்பந்து தொடரில் அந்த அணியின் பயிற்சியாளர் பர்னாண்டோ சாண்டோஸ் உடனான கருத்து வேறுபாடு காரணமாக, ரொனால்டோ பெஞ்ச்-ல் அமர வைக்கப்பட்டார். இதையடுத்து அந்த அணி காலிறுதி போட்டியில் தோல்வியடைந்து தொடரில் இருந்து வெளியேறியது.
இதைத் தொடர்ந்து கத்தார் உலகக் கோப்பை கால்பந்து தொடரில் இருந்து முன்கூட்டியே வெளியேறினாலும் போர்ச்சுகல் அணிக்காக தொடர்ந்து விளையாடுவேன் என்று ரொனால்டோ தெரிவித்திருந்தார். ஆனால், தற்போது 37 வயதான ரொனால்டோ, 2026 ஆம் ஆண்டு நடைபெற உள்ள உலகக் கோப்பை கால்பந்து தொடரில் விளையாட வாய்ப்பில்லை என்று கால்பந்து விமர்சகர்கள் கருதுகின்றனர்.