
உலகின் டாப் 8 வீராங்கனைகள் மட்டும் பங்கேற்ற டபிள்யூ.டி.ஏ. இறுதி சுற்று எனப்படும் மகளிர் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி அமெரிக்காவின் போர்த் வொர்த் நகரில் நடந்தது. இதில் ஒற்றையர் பிரிவில் இந்திய நேரப்படி நேற்று காலை நடந்த இறுதி ஆட்டத்தில் பெலாரஸ் வீராங்கனை அரினா சபலென்கா, பிரான்ஸின் கரோலின் கார்சியா ஆகியோர் பலப்பரீட்சை நடத்தின.
பரபரப்பான இந்த ஆட்டத்தில் முதல் செட் டைபிரேக்கர் வரை சென்றது. டைபிரேக்கரில் சபலென்கா இழைத்த தவறை சரியாக பயன்படுத்தக் கொண்ட கார்சியா அந்த செட்டை தனதாக்கினார். அடுத்த செட்டிலும் அந்த உத்வேகத்தை தொடர்ந்த கார்சியா, எதிராளியை அடக்கி வெற்றியை தன்வசப் படுத்தினார்.
ஒரு மணி 41 நிமிடம் நடந்த இந்த ஆட்டத்தில் கரோலின் கார்சியா 7-6 (7-4), 6-4 என்ற நேர்செட்டில் சபலென்காவை வீழ்த்தி முதல்முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். மகளிர் டென்னிஸ் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்ற 2ஆவது பிரான்ஸ் வீராங்கனை என்ற பெருமையை 29 வயதான கரோலின் கார்சியா பெற்றார்.