ஹாக்கி தொடர்: இந்தியாவை வீழ்த்தி 4-1 என்ற கணக்கில் தொடரை வென்றது ஆஸ்திரேலியா!
இந்தியாவுக்கு எதிரான ஐந்தாவது ஹாக்கி போட்டியில் ஆஸ்திரேலிய அணி 5-4 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்று, தொடரை 4-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.
வரும் ஜனவரி மாதம் ஒடிஸாவில் எஃப்ஐஎச் ஹாக்கி ஆடவா் உலகக் கோப்பை போட்டி நடைபெறவுள்ளது. இதற்கு தயாராகும் வகையில் உலகின் நம்பா் ஒன் அணியான ஆஸ்திரேலியாவுடன் 5 ஆட்டங்கள் கொண்ட தொடரில் இந்தியா பங்கேற்றது.
முதலிரண்டு ஆட்டங்களை ஆஸ்திரேலியாவும், மூன்றாவது ஆட்டத்தில் இந்தியாவும் வென்றிருந்தன. இதற்கிடையே நேற்று நடைபெற்ற நான்காவது போட்டியிலும் ஆஸ்திரேலிய அணி வெற்றிபெற்று 3-1 என்ற கணக்கில் தொடரை வென்றிருந்தது.
இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான ஐந்தாவது போட்டி இன்று நடைபெற்றது. இப்போட்டியில் ஆறுதல் வெற்றியையாவது பெறவேண்டும் என்ற உத்வேகத்துடன் இந்திய அணி களமிறங்கியது.
ஆனால் ஆட்டம் தொடங்கிய 5ஆவது மற்றும் 17ஆவது நிமிடங்களில் ஆஸ்திரேலிய அணியின் டாம் விக்ஹாம் அடுத்தடுத்து கோல்களை அடித்து அசத்தினார். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய அணியின் ஹர்மன்ப்ரித் சிங் ஆட்டத்தின் 24ஆவது நிமிடத்தில் கோலடித்தார்.
ஆனால் அதன்பின் ஆட்டத்தின் 29ஆவது நிமிடத்தில் ஆஸ்திரேலிய அணியின் அரன் ஜலேவ்ஸ்கி கோலடித்து அணியை முன்னிலைப் படுத்தினார். இதனால் முதல் பாதி ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலியா அணி 3-1 என்ற கோல் கணக்கில் முன்னிலைப் பெற்றது.
இதையடுத்து தொடங்கிய இரண்டாவது பாதி ஆட்டத்தின் 34ஆவது நிமிடத்தில் இந்திய அணியின் அமித் கோலடித்தார். ஆனால் ஆட்டத்தின் 40ஆவது நிமிடத்தில் ஜேகப் ஆண்டர்சனும், ஜேக் விட்டன் ஆட்டத்தின் 54ஆவது நிமிடத்திலும் கோலடிக்க ஆஸ்திரேலிய அணி 5-2 என்ற கணக்கில் முன்னிலைப் பெற்றது.
ஆனாலும் தொடர்ந்து போராடிய இந்திய அணிக்கு ஆட்டத்தின் 55ஆவது நிமிடத்தில் சுக்ஜீத் சிங்கும், ஆட்டத்தின் 60ஆவது நிமிடத்தில் ஹர்மன்ப்ரீத் சிங் மீண்டுமொரு கோலடித்து இந்திய அணியால் ஆட்டத்தை கைப்பற்ற முடியவில்லை.
இதனால் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலிய அணி 5-4 என்ற புள்ளிகணக்கில் இந்திய அணியை வீழ்த்தி அசத்தல் வெற்றிபெற்றது. இதன்மூலம் ஆஸ்திரேலிய அணி 4-1 என்ற வெற்றிக்கணக்கில் தொடரை வென்றும் அசத்தியது.
Win Big, Make Your Cricket Tales Now