ஹாக்கி உலகக்கோப்பை: மூன்றாவது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது ஜெர்மனி!
உலக கோப்பை ஹாக்கி தொடரில் இறுதிப் போட்டியில் நடப்பு சாம்பியனான பெல்ஜியத்தை வீழ்த்தி ஜெர்மனி அணி, 3ஆவது முறையாக கோப்பையை கைப்பற்றியது.
ஆடவருக்கான ஹாக்கி உலகக்கோப்பை தொடர் ஒடிஷாவில் நடைபெற்றது. இதில் புவனேஸ்வரில் நேற்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் பெல்ஜியம் - ஜெர்மனி அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
இப்போட்டி தொடங்கியது முதலே இரு அணிகளும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி அடுத்தடுத்து கோல்களை அடித்தனர். போட்டியின் 10 மற்றும் 11ஆது நிமிடத்தில் பெல்ஜியம் அணி தொடர்ந்து 2 கோல்களை அடித்தது. 2-0 என்ற கணக்கில் பின்தங்கிய ஜெர்மனி, பிறகு அதிரடியை காட்டி முன்னிலை பெற்றது.
ஆட்டத்தின் 29ஆவது நிமிடம், 41ஆவது நிமிடம் மற்றும் 48ஆவது நிமிடத்தில் ஜெர்மனி அணி அடுத்தடுத்து 3 கோல்களை அடித்து 3-2 என்ற கணக்கில் முன்னிலை வகித்தது. இந்த தொடரில் ஜெர்மனி அணி பின்தங்கிய நிலையிலிருந்து கோல் அடித்து முன்னிலை பெற்றது இது 3ஆவது முறை. இதிலிருந்து தோல்வியை ஒப்பு கொள்ளாமல் எப்படி ஜெர்மனி போராடி வெற்றி பெற்று இருக்கிறது என்று நமக்கு தெரிந்திருக்கும்.
இந்த நிலையில், ஜெர்மனி வெற்றியை நோக்கி நகர்ந்த நிலையில், யாரும் எதிர்பார்க்காத வகையில் ஆட்டத்தின் 59ஆவது நிமிடத்தில் பெல்ஜியம் அணி தங்களது 3ஆவது கோலை போட்டு ஆட்டத்தை சமன் செய்தனர். இதனையடுத்து வெற்றியாளர்களை தீர்மானிக்க பெனால்டி சூட் அவுட் முறை கடைபிடிக்கப்பட்டது.
இதிலும் 5 வாய்ப்புகளில் ஜெர்மனி மற்றும் பெல்ஜியம் அணி தலா 3 முறை கோல் போட்டு அதிலும் சமனானது. இதனைத் தொடர்ந்து மீண்டும் பெனாலடி சூட் அவுட் கடைபிடிக்கப்பட்டது. அதில் ஜெர்மனி தொடர்ந்து 2 கோல்கள் போட, பெல்ஜியம் அணி ஒரு கோலை போட்டு, ஒரு கோலை தவறவிட, சடன் டெத் (Sudden death) முறைப்படி ஜெர்மனி அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.
இதற்கு முன்பு ஜெர்மனி 2002 மற்றும் 2006ஆம் ஆண்டு உலககோப்பையை வென்றது. இதன் மூலம் ஆஸ்திரேலியா, நெதர்லாந்துக்கு பிறகு 3 முறை உலக கோப்பையை வென்ற மூன்றாவது அணி என்ற பெருமையை ஜெர்மனி பெற்றது. உலக கோப்பை ஹாக்கி வரலாற்றில் பாகிஸ்தான் மட்டும் 4 முறை உலக கோப்பையை வென்று இருப்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து 2ஆவது முறையாக இந்தியா, உலக கோப்பை ஹாக்கி தொடரை வெற்றிக்கரமாக நடத்தி இருப்பதாக, சர்வதேச ஹாக்கி சம்மேளனம் பாராட்டி உள்ளது.
Win Big, Make Your Cricket Tales Now