
ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகரில் நடைபெற்று வரும் ஆஸ்திரேலியன் ஓபன் டென்னிஸ் தொடரில் நேற்று மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் 5ஆம் நிலை வீராங்கனையான பெல்லாரசின் சபலெங்கா, 22ஆம் நிலை வீராங்கனையும், விம்பிள்டன் சாம்பியனுமான கஜகஸ்தானின் எலெனா ரைபகினாவை எதிர்த்து விளையாடினார்.
இதில் முதல் செட்டை சபலெங்கா 4-6 என இழந்தார். எனினும்அடுத்த இரு செட்களையும் துடிப்புடன் விளையாடி 6-3, 6-4 என கைப்பற்றினார். முடிவில் 2 மணி நேரம் 28 நிமிடங்கள் நடைபெற்ற போராட்டத்தில் சபலெங்கா 4-6, 6-3, 6-4 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றார்.
கிராண்ட் ஸ்லாம் தொடரில் சபலெங்கா சாம்பியன் பட்டம் வெல்வது இதுவே முதன்முறையாகும். மேலும் ஆஸ்திரேலிய ஓபன் பட்டத்தை வெல்லும் 2ஆவது பெல்லாரஸ் வீராங்கனை என்ற பெருமையையும் பெற்றுள்ளார் சபலெங்கா. இதற்கு முன்னர் அந்நாட்டைச் சேர்ந்த விக்டோரியா அசரங்கா 2012 மற்றும் 2013ஆம் ஆண்டுகளில் பட்டம் வென்றிருந்தார்.