ஐஎஸ்எல் 2022: சொன்னை - பெங்களூரு இடையேயான போட்டி டிராவில் முடிவு!
பெங்களூரு எஃப்சி - சென்னையின் எஃப்சி அணிகள் மோதிய ஐஎஸ்எல் லீக் ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிவடைந்தது.
ஒன்பதாவது சீசன் இந்தியன் சூப்பர் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து போட்டி கொச்சி, பெங்களூரு, புனே, கொல்கத்தா, ஜாம்ஷெட்பூர், சென்னை உள்பட பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் ஒவ்வொரு அணியும், மற்ற அணிகளுடன் உள்ளூர் மற்றும் வெளியூர் அடிப்படையில் 2 முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் டாப்-6 இடங்களை பிடிக்கும் அணிகள் 'பிளே-ஆப்' சுற்றுக்கு முன்னேறும்.
இந்த தொடரில் சென்னை நேரு மைதானத்தில் நேற்று இரவு நடைபெற்ற 8ஆவது லீக் ஆட்டத்தில் 2 முறை சாம்பியனான சென்னையின் எஃபிசி அணி, முன்னாள் சாம்பியனான பெங்களூரு எஃப்சி அணியுடன் மோதியது. கரோனா பரவல் காரணமாக கடந்த 2 சீசன் போட்டிகள் கோவாவில் மட்டுமே நடந்தது. தற்போது மீண்டும் போட்டி பழைய நிலைமைக்கு திரும்பி உள்ளூர் ரசிகர்கள் முன்னிலையில் நடைபெறுகிறது.
சென்னையில் இரண்டரை ஆண்டுக்கு பிறகு மீண்டும் ஐஎஸ்எல் அரங்கேறுவது ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது. அனிருத் தபா தலைமையிலான சென்னை அணி கொல்கத்தாவில் நடந்த தனது முதலாவது லீக் ஆட்டத்தில் 2-1 என்ற கோல் கணக்கில் வலுவான ஏடிகே மோகன் பகானை வீழ்த்தியது. இதே போல் சுனில் சேத்ரி தலைமையிலான பெங்களூரு அணி முதல் ஆட்டத்தில் 1-0 என்ற கோல் கணக்கில் நார்த் ஈஸ்ட் யுனைடெட்டை சாய்த்தது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் நேற்று நடைபெற்ற போட்டியில் பெங்களூரு அணி சார்பில் ராய் கிருஷ்ணா ஆட்டத்தின் 4ஆவது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார். தொடர்ந்து சென்னையின் எஃப்சி அணி சார்பில் பிரசாந்த் 45ஆவது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார். இதனால் முதல் பாதி ஆட்டநேர முடிவில் இரு அணிகளும் தல ஒரு கோலை அடித்து சமனிலையில் இருந்தன.
அதன்பின் தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது பாதி ஆட்டத்தில் இரு அணிகளும் கோலடிக்க எடுத்த முயற்சிகள் அனைத்தும் தோல்வியிலேயே முடிந்தன. இதனால் ஆட்டநேர முடிவில் இரு அணிகளும் தலா ஒரு கோலுடன் இருந்தது. இதையடுத்து சென்னை-பெங்களூரு அணிகளின் ஆட்டம் டிராவில் முடிந்தது.
Win Big, Make Your Cricket Tales Now