
ஃபிஃபா உலகக்கோப்பை கால்பந்து தொடர் பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. ஒரே குரூப்பில் உள்ள அணிகளில் யாருக்கும் சாதகம் ஏற்படக் கூடாது என்பதற்காக ஒரே நேரத்தில் 4 அணிகளுக்கும் போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. அந்த ஒரு பகுதியாக குரூப் ஈ பிரிவில் உள்ள ஜப்பான் - ஸ்பெயின் அணிகள் விளையாடியது. இதில் ஜப்பான் அணி வெற்றிபெற்றால் ரவுண்ட் ஆஃப் 16 சுற்றுக்கு முன்னேற முடியும் என்பதால், ஆட்டம் பரபரப்பாக இருந்தது.
ஆனால் ஆட்டம் தொடங்கிய 11வது நிமிடத்திலேயே ஸ்பெயின் அணியின் மொராட்டா முதல் கோலை அடித்து அசத்த, ரசிகர்கள் அனைவரும் இது ஒன் சைடட் ஆட்டமாக இருக்கும் என்று எதிர்பார்த்தனர். அதற்கேற்ப ஸ்பெயின் அணி வீரர்கள் முதல் பாதி அதிக நேரம் பந்தை தங்களது கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர்.
ஸ்பெயின் அணிக்கு எதிராக ஜப்பான் வீரர்கள் தடுப்பாட்டத்தில் மட்டுமே ஈடுபட வேண்டிய நிலை உருவாகியது. இருப்பினும் முதல் பாதி ஆட்ட நேரம் முடிவில் 1-0 என்ற கோல் கணக்கில் ஸ்பெயின் அணி முன்னிலை பெற்றது. இதனால் இரண்டாம் பாதி ஆட்டம் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தவில்லை. ஆனால் அனைவருக்கும் ஆச்சரியமளிக்கும் வகையில் ஜப்பான் அணி, 48வது நிமிடத்திலேயே முதல் கோல் அடித்து அசத்தியது.