
22ஆவது ஃபிஃபா கால்பந்து உலகக்கோப்பை தொடர் கத்தாரில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. குரூப் சுற்று போட்டிகள் முடிவடைந்து நேற்றுடன் நாக் அவுட் சுற்று போட்டிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த உலகக்கோப்பை கிறிஸ்டியானா ரொனால்டோ மற்றும் லயோனல் மெஸ்ஸி இருவருக்கும் இதுவே கடைசி உலக கோப்பை என்று பார்க்கப்படுகிறது. இதனால் இந்த உலகக்கோப்பையை மெஸ்ஸி அல்லது ரொனால்டோ வெல்ல வேண்டும் என்று அதிகளவிலான ரசிகர்கள் விரும்பி வருகின்றனர்.
இந்த நிலையில் ரவுண்ட் ஆஃப் 16 சுற்றில் அர்ஜென்டினா அணியை எதிர்த்து ஆஸ்திரேலியா அணி விளையாடியது. இந்த ஆட்டத்தில் களமிறங்கியதன் மூலம் நட்சத்திர வீரர் லயோனல் மெஸ்ஸி தனது ஆயிரமாவது போட்டியில் களமிறங்கி சாதனை படைத்துள்ளார். இதுவரை அர்ஜென்டினா அணிக்காக 169 போட்டிகளிலும், பார்சிலோனா அணிக்காக 778 போட்டிகளிலும், பிஎஸ்ஜி அணிக்காக 53 போட்டிகளிலும் மெஸ்ஸி களமிறங்கியுள்ளார்.
தனது ஆயிரமாவது போட்டியில் களமிறங்கியதோடு மட்டுமல்லாமல் 35ஆவது நிமிடத்தில் அர்ஜென்டினா அணிக்காக முதல் கோலையும் அடித்து அசத்தினார். ஆட்டம் தொடங்கியது முதலே மெஸ்ஸியை சுற்றி இரு வீரர்கள் நின்று தடுப்பாட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இதனிடையே 35வது நிமிடத்தில் கிடைத்த ஃபிரீ கிக் வாய்ப்பில், சாதுர்யமாக கோல் அடித்தார்.