
ஃபிஃபா உலகக்கோப்பை கால்பந்து தொடரின் முதல் காலிறுதி ஆட்டத்தில் குரோஷியா அணி பிரேசிலை வீழ்த்தி அதிர்ச்சி கொடுத்தது. இதனால் உலகக்கோப்பைத் தொடர் மீதான சுவாரஸ்யம் அடுத்தக் கட்டத்தை எட்டியது. இதனைத் தொடர்ந்து இரண்டாவது காலிறுதி போட்டியில் வலிமையான அர்ஜென்டினா அணியை எதிர்த்து தடுப்பாட்டத்தில் அசத்தி வரும் நெதர்லாந்து அணி மோதியது.
இந்த ஆட்டம் தொடங்கியது முதலே இரு அணிகளும் நிதானமாக விளையாடினர். முதல் 15 நிமிடங்களில் அர்ஜென்டினா அணி தங்கள் கட்டுப்பாட்டுக்குள் பந்தை வைத்திருந்த நிலையில், நெதர்லாந்து அணி அடுத்த சில நிமிடங்களில் ஆட்டத்திற்குள் வந்தது. இரு அணி வீரர்களும், எதிரணியின் தடுப்பாட்டத்தை தகர்க்க முடியாமல் திணறினர்.
ஆனால் 35ஆவது நிமிடத்தில் மெஸ்ஸி கொடுத்த மேஜிக் பாஸை, அர்ஜென்டினா அணியின் இளம் வீரர் மொலினா கோலாக மாற்றினார். இதன் மூலம் அர்ஜென்டினா அணி 1-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது. இதன் பின்னர் அர்ஜென்டினா அணியின் ஆதிக்கம் தொடங்கியது. இதனிடையே முதல் பாதி ஆட்டம், அர்ஜென்டினா அணியின் முன்னிலையுடன் முடிவுக்கு வந்தது.