
ஃபிஃபா உலகக்கோப்பை கால்பந்து தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. உலகக்கோப்பை அரையிறுதி சுற்றுக்கு குரோஷியா, அர்ஜென்டினா, மொராக்கோ, பிரான்ஸ் ஆகிய அணிகள் முன்னேறின. அதில் முதல் அரையிறுதி ஆட்டத்தில் அர்ஜென்டினா அணியை எதிர்த்து குரோஷியா அணி விளையாடியது. ஒரு பக்கம் லயோனல் மெஸ்ஸி, இன்னொரு பக்கம் லூகா மோட்ரிச் இருந்ததால், ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டது.
முக்கியமான ஆட்டம் என்பதால், ஒரு அணிகளுமே தொடக்கம் முதல் எச்சரிக்கையாக விளையாடினர். ஒவ்வொரு முறையும் எதிரணி கோல் போஸ்ட் பக்கம் பந்து கொண்டு சென்ற போதும், தடுப்பாட்ட வீரர்களால் தடுத்து நிறுத்தப்பட்டது. ஆனால் அர்ஜென்டினா வீரர் ஆல்வரஸ் தனது வேகத்தை பயன்படுத்தி பந்தை கோல் அடிக்க எடுத்து சென்றார். ஆனால் குரோஷியா கோல்கீப்பர் செய்த தவறு காரணமாக கோல் அடிக்க முடியவில்லை. இதன் மூலம் அர்ஜென்டினா அணிக்கு ஆட்டத்தின் 34ஆவது நிமிடத்தில் பெனால்டி வாய்ப்பு கிடைத்தது.
இந்த பெனால்டியை நட்சத்திர வீரர் மெஸ்ஸி அடிக்க தயாரானார். ஆனால் பெனால்டி வாய்ப்புகளில் மெஸ்ஸி சொதப்பி இருப்பதால், இதனை எவ்வாறு எதிர்கொள்ள போகிறார் என ரசிகர்கள் சந்தேகத்துடன் காத்துக்கொண்டிருந்தனர். ஆனால் மெஸ்ஸி எதையும் பற்றியும் கவலைப்படாமல் கோல் போஸ்டின் டாப் கார்னருக்கும் வேகமாக பந்தை தள்ளினார்.