
கா்நாடக மாநிலம், பெங்களூருவில் தேசிய ஓபன் தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. சனிக்கிழமை கண்டீரவா மைதானத்தில் நடைபெற்ற மகளிா் போல்வால்ட் பிரிவில் தமிழக வீராங்கனை ரோஸி மீனா பால்ராஜ் (25) 4.21 மீ உயரம் தாண்டி புதிய தேசிய சாதனையுடன் தங்கம் வென்றாா்.
கடந்த 15 நாள்களில் இரண்டாவது முறையாக புதிய சாதனை படைத்துள்ளாா் ரோஸி. ஏற்கெனவே காந்தி நகரில் நடைபெற்ற 36ஆவது தேசிய விளையாட்டு போட்டியில் 4.20 மீ உயரம் தாண்டி தங்கம் வென்று தேசிய சாதனை படைத்தாா். தற்போது அவரது சாதனையே அவரே முறியடித்துள்ளாா்.
மகளிர் 1500 மீ., ஓட்டம் நடந்தது. இதன் முதல் தகுதிச்சுற்றில் தமிழகத்தின் கவிதா, 4 நிமிடம், 33.20 வினாடியில் ஐந்தாவது இடம் பெற்று, இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். மற்றொரு வீராங்கனை நீலாம்பரி 4 நிமிடம் 44.79 வினாடியில் ஓடி இறுதிப்போட்டிக்குள் நுழைந்துள்ளார்.