
கத்தார் உலகக் கோப்பை கால்பந்து தொடர் முடிவடைந்துள்ள நிலையில் தரவரிசை பட்டியலை சர்வதேச கால்பந்து சம்மேளனம் (பிஃபா) வெளியிட்டுள்ளது. இதில் உலக சாம்பியனான அர்ஜெண்டினா 3ஆவது இடத்தில் இருந்து 2ஆவது இடத்துக்கு முன்னேறி உள்ளது. சாம்பியன் பட்டம் வென்ற போதிலும் அர்ஜெண்டினா அணியால் முதலிடத்தை பிடிக்க முடியாமல் போனது.
மாறாக உலகக் கோப்பை தொடரில் கால் இறுதி சுற்றுடன் வெளியேறிய பிரேசில் அணியானது சமீபகால ஆண்டுகளின் செயல்திறன் அடிப்படையில் தரவரிசையில் முதலிடத்தை தக்க வைத்துக்கொண்டுள்ளது. இறுதிப் போட்டியில் அர்ஜெண்டினாவிடம் வீழ்ந்த பிரான்ஸ் அணியும் ஒரு இடம் முன்னேறி 3ஆவது இடத்தை பெற்றுள்ளது.
லீக் சுற்றுடன் வெளியேறிய பெல்ஜியம் அணியானது இரு இடங்களை இழந்து 4ஆவது இடத்தில் உள்ளது. கால் இறுதி சுற்றில் தோல்வியடைந்த இங்கிலாந்து, நெதர்லாந்து அணிகள் முறையே 5 மற்றும் 6ஆவது இடத்தில் நீடிக்கின்றன. அரை இறுதியில் தோல்வியடைந்த குரோஷியா 5 இடங்கள் முன்னேறி 7ஆவது இடத்தை பிடித்துள்ளது.