எடிபி ஃபைனல்ஸ்: காஸ்பர் ரூட்டை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றார் ஜோகோவிச்!
ஏடிபி ஃபைனல்ஸ் இறுதிப்போட்டியில் நட்சத்திர வீரர் நோவாக் ஜோகோவிச் 7-5, 6-3 என்ற செட் கணக்கில் காஸ்பர் ரூட்டை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது.
உலக தரவரிசையில் முன்னணியில் இருக்கும் டாப் 8 வீரர்கள் மட்டும் பங்கேற்கும் 'ஏடிபி பைனல்ஸ்' எனப்படும் ஆடவர் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி இத்தாலியின் துரினில் கடந்த 13ஆம் தேதி தொடங்கியது. குரூப் சுற்று முடிவில் நோவக் ஜோகோவிச், டெய்லர் பிரிட்ஸ், காஸ்பர் ரூட் மற்றும் ஆண்ட்ரே ரூப்லெவ் அரையிறுதிக்கு தகுதி பெற்று இருந்தனர்.
இதில் முதல் அரையிறுதி போட்டியில் நோவாக் ஜோகோவிச் - டெய்லர் பிரிட்ஸ் ஆகியோர் மோதினர். இந்த போட்டியில் ஜோகோவிச் 7-6 (7-5) , 7-6 (8-6) என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று இறுதிக்கு முன்னேறி இருந்தார். இதை தொடர்ந்து நடைபெற்ற 2ஆவது அரையிறுதியில் ஆண்ட்ரே ரூப்லெவை வீழ்த்தி நார்வேயின் காஸ்பர் ரூட் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றார்.
இந்த நிலையில் நேற்று நடைபெற்ற இறுதி போட்டியில் நோவக் ஜோகோவிச்- காஸ்பர் ரூட் ஆகியோர் சாம்பியன் பட்டத்துக்காக பலப்பரீட்சை நடத்தினர். தொடக்கம் முதலே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜோகோவிச் முதல் செட்டை 7-5 என கைப்பற்றினார்.
இதைத்தொடர்ந்து இரண்டாவது செட்டை 6-3 என எளிதில் வென்றார். இதன்மூலம் 7-5, 6-3 என்ற செட் கணக்கில் காஸ்பர் ரூட்டை வீழ்த்திய ஜோகோவிச் கோப்பையை கைப்பற்றி அசத்தினார்.
Win Big, Make Your Cricket Tales Now