
புரோ கபடி லீக்கின் 10ஆவது சீசன் போட்டிகள் அஹ்மதாபாத்தில் உள்ள டிரான்ஸ் ஸ்டேடியா மைதானத்தில் நேற்று கோலாகலமாக தொடங்கியது. மொத்தம் 12 அணிகள் கலந்து கொண்டுள்ள இந்த தொடரின் தொடக்க ஆட்டத்தில் குஜராத் ஜெயண்ட்ஸ் அணி 6 புள்ளிகள் வித்தியாசத்தில் தெலுகு டைட்டன்ஸை வீழ்த்தி அசத்தல் வெற்றியைப் பெற்று அசத்தியது.
இதில் நேற்று நடைபெற்ற மற்றொரு ஆட்டத்தில் யு மும்பா - யுபி யோத்தாஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இந்தப் போட்டியில் தொடக்கம் முதலே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய யு மும்பா அணி புள்ளிகளை பெற்று முன்னிலையில் இருந்தது. இதன்மூலம் யுபி யுத்தாஸ் அணியை முதலில் ஆல் - அவுட் செய்து கெத்து காண்பித்தது மும்பா அணி.
குறிப்பாக யு மும்பா அணியின் சுரேந்தர் கில், ரிங்கு தடுப்பாட்டத்தில் கில்லியாக இருந்தனர். இதனால் ஆட்டத்தின் முதல் பாதிநேர முடிவில் யு மும்பா அணி 19 - 14 என்ற கணக்கில் முன்னிலைப் பெற்று அசத்தியது. இதையடுத்து தொடங்கிய இரண்டாம் பாதியில் வேகம் எடுத்த யுபி யோத்தாஸ் மும்பா அணியை ஆல் - அவுட் செய்தது. அப்போதும் கூட மும்பா அணியை விட அதிக புள்ளிகள் பெற முடியவில்லை.