Advertisement

PKL 2022: நொடிக்கு நொடி பரபரப்பு; டை பிரேக்கரில் சாதித்தது தமிழ் தலைவாஸ்!

யு பி யோதாஸ் அணிக்கெதிரான பிகேஎல் எலிமினேட்டர் சுற்று ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் அணி டை பிரேக்கர் முறையில் 6-4 என்ற புள்ளிக்கணக்கில் வெற்றிபெற்று, முதல் முறையாக அரையிறுதிச்சுற்றுக்கு முன்னேறி சாதனைப் படைத்துள்ளது.

Advertisement
Bharathi Kannan
By Bharathi Kannan December 13, 2022 • 22:08 PM
PKL 2022: TamilThalaivas won the match and qualified for Semifinal for the first time in Pro Kabaddi
PKL 2022: TamilThalaivas won the match and qualified for Semifinal for the first time in Pro Kabaddi (Image Source: Google)

புரோ கபடி லீக் போட்டி 9ஆவது சீசன் கடந்த அக்டோபர் 7ஆம் தேதி தொடங்கியது. இந்த சீசனில் 12 அணிகள் பங்கேற்றன. இந்த புரோ கபடி லீக் போட்டியில், ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா 2 முறை மோதின. லீக் முடிவில் டாப்-2 இடங்களை பிடித்த ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் (82 புள்ளி), புனேரி பால்டன் (80 புள்ளி) ஆகிய அணிகள் பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெற்று நேரடியாக அரைஇறுதியில் விளையாடுகின்றன.

இதே போல் 3ஆவது இடத்தை பெங்களூரு புல்சும் (74 புள்ளி), 4ஆவது இடத்தை யு.பி. யோதாஸும் (71 புள்ளி), 5ஆவது இடத்தை தமிழ் தலைவாஸும் (66 புள்ளி), 6ஆவது இடத்தை நடப்பு சாம்பியன் தபாங் டெல்லியும் (63 புள்ளி) பிடித்து பிளே-ஆப் சுற்றுக்கு வந்துள்ளன.

பிளே-ஆப் சுற்று மும்பையில் இன்று தொடங்கியது. இன்று (டிசம்பர் 13) நடக்கும் எலிமினேஷன் சுற்று ஆட்டங்களில் பெங்களூரு புல்ஸ்- தபாங் டெல்லி அணிகளும், தமிழ் தலைவாஸ்- யு.பி. யோதாஸ் அணிகள் மோதுகின்றன. இதில் வெற்றி பெறும் அணிகள் அரைஇறுதிக்கு செல்லும். தோல்வி அடையும் அணி இந்த சீசனில் இருந்து வெளியேறும்.

புரோ கபடி லீக் போட்டிகளில் முதல் முறையாக பிளே-ஆப் சுற்றுக்கு சென்றுள்ள தமிழ் தலைவாஸ் அணி யு.பி யோத்தாஸை வீழ்த்தி அரையிறுதிக்கு செல்லுமா என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். உ.பி யோத்தாஸ் – தமிழ் தலைவாஸ் இரண்டு அணிகளும் இதற்கு முன் விளையாடி 2 போட்டிகளில் தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்றுள்ளன.

இந்த நிலையில்தான், உ.பி யோத்தாஸ் – தமிழ் தலைவாஸ் அணிகள் மும்பையில் உள்ள என்.எஸ்.சி.ஐ எஸ்.வி.பி மைதானத்தில் மோதின. அதன்படி இப்போட்டியில் டாஸ் வென்ற தமிழ் தலைவாஸ் அணி முதலில் ரைடு செய்ய தீர்மானித்து களமிறங்கியது. அதன்படி விளையாடிய முதல் ரைடு முதலே தமிழ் தலைவாஸ் அணி புள்ளிகளை பெற தொடங்கியது.

தொடர்ந்து முதல் சில புள்ளிகளைப் பெற்ற தமிழ் தலைவாஸ் அணி, பிரதீப் நர்வாலை ஆட்டத்தையும் டிஃபென்ஸ் மூலம் தடுத்து நிறுத்தியது. ஆனால் சற்றும் பின் வாங்காத யுபி யோதாஸ் அணியும் தனது அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி புள்ளிகளைப் பெறத்தொடங்கியதால் ஆட்டத்தின் பரபரப்பு எகிறியது. 

ஒரு கட்டத்தில் தமிழ் தலைவாஸ் அணி 6 புள்ளிகள் முன்னிலைப் பெற்ற போதிலும் யுபி யோதஸ் அணியின் பிரதீப் நர்வால், சுரேந்தர் கில் ஆகியோரின் அபார ஆட்டத்தினால் ஆட்டத்தை சமன்செய்தது. இதனால் கடைசி ஒரு நிமிடமே இருந்த நிலையில் இரு அணிகளும் 33 புள்ளிகளுடன் சமனிலையில் இருந்தன.

இறுதியில் பிரதீப் நர்வால் தனது ஒரே ரெய்டில் மூன்று புள்ளிகளைப் பெற்று ஆட்டத்தின் போக்கை மாற்றினாலும், அடுத்த ரெய்டில் தமிழ் தலைவாஸிடம் மண்ணைக் கவ்வியதால் மீண்டும் ஆட்டம் சமனை நோக்கி சென்றது. அதன்படி ஆட்டத்தின் கடைசி ரெய்டை தமிழ் தலைவாஸ் அணியின் கேப்டன் அஜிங்கியா பவார் களமிறங்கினார். ஆனால் அவர் புள்ளிகளை எடுக்காமல் டை க்காக விளையாடியதால், இப்போட்டி 36 -36 என்ற கணக்கில் சமனில் முடிந்தது.

இதில் தமிழ் தலைவாஸ் அணி தரப்பில் அதிகபட்சமாக நரேந்த ஹொஷியர் 13 புள்ளிகளையும், கேப்டன் அஜிங்கியா பவர் 10 புள்ளிகளையும் கைப்பற்றினர். யுபி யோதாஸ் அணி தரப்பில் அதிகபட்சமாக பிரதீப் நர்வால் 12 புள்ளிகளையும், சுரேந்தர் கில் 8 புள்ளிகளையும் கைப்பற்றினர்.

இதையடுத்து டை பிரேக்கருக்கு ஆட்டம் சென்றது. இதில் தமிழ் தலைவாஸ் அணி முதல் ரைடில் புள்ளியை இழந்தாலும், பிரதீப் நர்வாலை பிடித்த அதனை சரிகட்டியது. அதன்பின் இரண்டாவது ரைடை புள்ளியாக மாற்றிய தமிழ் தலைவாஸ், அடுத்த புள்ளியை இழந்தது.

அதன்பின் நரேந்தர் போனஸ் புள்ளியைப் பெற, அடுத்து வந்த யுபி யோதஸ் ரைடரை வலைத்து பிடித்து ஆட்டத்தில் முன்னிலைப் பெற்றது. பின்னர் அஜிங்கியா பவர் போனஸ் புள்ளியைப் பெற தமிழ் தலைவாஸ் அணி 5 புள்ளிகளைப் பெற்று வெற்றிக்கு அருகில் சென்றது. 

இதையடுத்து யுபி யோதாஸ் போனஸ் புள்ளியைப் பெற, அடுத்த ரைடில் தமிழ் தலைவாஸ் அணி போனஸை பெற்று அசத்தியது. இதன்மூலம் டை பிரேக்கரில் தமிழ் தலைவாஸ் அணி 6 - 4 என்ற புள்ளிகணக்கில் யுபி யோதாஸை வீழ்த்தி த்ரில் வெற்றியைப் பெற்றதுடன், புரோ கபடி லீக் வரலாற்றில் தமிழ் தலைவாஸ் அணி அரையிறுதிக்கு முன்னேறி சாதனைப் படைத்தது.

இதையடுத்து அரையிறுதி போட்டியில் தமிழ் தலைவாஸ் அணி புனேரி பல்தான் அணியை எதிர்கொள்கிறது.


Win Big, Make Your Cricket Tales Now

Advertisement