PKL 2022: இரண்டாவது முறையாக கோப்பையை வென்றது ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ்!
புரோ கபடி லீக் தொடரின் இறுதிப்போட்டியில் புனேரி பல்தானை 33-29 என்ற கணக்கில் வீழ்த்தி 2வது முறையாக கோப்பையை வென்றது ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணி.
புரோ கபடி லீக் தொடரின் 9ஆவது சீசன் வெற்றிகரமாக நடந்து முடிந்தது. பெங்களூரு, புனே, ஹைதராபாத், மும்பை ஆகிய நகரங்களில் நடந்தது. இத்தொடரின் முதல் அரையிறுதியில் பெங்களூரு புல்ஸை வீழ்த்தி ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணியும், 2ஆவது அரையிறுதியில் தமிழ் தலைவாஸை வீழ்த்தி புனேரி பல்தான் அணியும் ஃபைனலுக்கு முன்னேறின.
புரோ கபடி லீக் தொடரின் முதல் சீசனில் கோப்பையை வென்ற ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணி, 2ஆவது முறையாக கோப்பையை வெல்லும் முனைப்பிலும், புனேரி பல்தான் அணி முதல் முறையாக கோப்பையை வெல்லும் முனைப்பிலும் களமிறங்கின.
அதன்படி மும்பையில் இன்று நடந்த இறுதிப்போட்டியின் தொடக்கம் முதலே இரு அணிகளும் சிறப்பான் ஆட்டத்தை வெளிப்படுத்தி புள்ளிகளைப் பெற்றனர். இதில் ஆரம்பத்தில் 2-3 புள்ளிகள் முன்னிலையில் இருந்துவந்த ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணி கடைசியில் 33-29 என்ற கணக்கில் வெற்றி பெற்று 2ஆவது முறையாக கோப்பையை வென்றது. புனேரி பல்தானின் கோப்பை கனவை தகர்த்து 2வது முறையாக வென்று ஜெய்ப்பூர் அணி சாதனை படைத்தது.
பாட்னா பைரேட்ஸுக்கு அடுத்தபடியாக ஒன்றுக்கு மேற்பட்ட முறை கோப்பையை வென்ற 2ஆவது அணி என்ற சாதனையை ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணி படைத்துள்ளது. முன்னதாக பாட்னா பைரேட்ஸ் அணி அதிகபட்சமாக 3 முறை கோப்பையை வென்றிருக்கிறது. அதற்கடுத்த இடத்தில் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணி 2 முறை கோப்பையை வென்றுள்ளது. பெங்கால் வாரியர்ஸ், பெங்களூரு புல்ஸ், யு மும்பா, தபாங் டெல்லி அணிகள் தலா ஒரு முறை கோப்பையை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
Win Big, Make Your Cricket Tales Now