ஃபிஃபா உலகக்கோப்பை: மெக்சிகோவின் வாய்ப்பை தடுத்த சவுதி அரேபியா!
சவுதி அரேபியா அணிக்கு எதிராக உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் 2-1 என்ற கோல் கணக்கில் மெக்சிகோ அணி அபார வெற்றிபெற்றது.
ஃபிஃபா உலகக்கோப்பைத் தொடர் குரூப் சி பிரிவில் உள்ள சவுதி அரேபியா அணியை எதிர்த்து மெக்சிகோ அணி விளையாடியது. சவுதி அரேபியா அணி முதல் போட்டியில் அர்ஜென்டினாவை வீழ்த்தி ஆச்சரியம் கொடுத்த நிலையில், அடுத்த போட்டியில் போலாந்து அணியுடன் தோல்வியை சந்தித்தது.
அதேபோல் மெக்சிகோ அணி போலாந்து அணிக்கு எதிரான போட்டியை டிரா செய்தும், அர்ஜென்டினா அணிக்கு எதிரான போட்டியில் தோல்வியடைந்தும் இந்த போட்டியை எதிர்கொண்டது. இந்த போட்டியில் வெற்றிபெற்றால், ரவுண்ட் ஆஃப் 16 சுற்றுக்கு முன்னேற முடியும் என்பதால் ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகமான இருந்தது.
இந்த ஆட்டம் தொடங்கியது முதலே சவுதி அரேபியா அணி வீரர்கள் கோல் அடிக்க முயற்சி செய்தனர். ஆனால் அதனை மெக்சிகோ அணியின் தடுப்பாட்ட வீரர்கள் சிறப்பாக தடுத்து நிறுத்தினர். சவுதி அரேபியா அணி தொடர்ந்து ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால், முதல் பாதியின் சில நிமிடங்களிலேயே இரு மஞ்சள் அட்டை வழங்கப்பட்டது.
தொடர்ந்து 25 நிமிடங்கள் கடந்த சில நிலையில், மெக்சிகோ அணி வீரர்கள் தங்களின் அட்டாக்கை தொடங்கினர். இருப்பினும் முதல் பாதி ஆட்டத்தில் எந்த கோலும் அடிக்கப்படவில்லை. இதனால் முதல் பாதி ஆட்டம் கோலின்றி முடிவுக்கு வந்தது. தொடர்ந்து இரண்டாம் பாதி ஆட்டத்தின் இரண்டாவது நிமிடத்திலேயே மெக்சிகோ கோல் அடித்து அசத்தியது. அந்த அணியின் மார்டின் முதல் கோல் அடித்து முன்னிலை பெற்றுக் கொடுத்தார்.
இதன் பின்னர் 51ஆவது நிமிடத்தில் மெக்சிகோ அணிக்கு கிடைத்த ஃபிரீ கிக் வாய்ப்பை பயன்படுத்தி அந்த அணியின் சாவேஸ் இரண்டாவது கோலை அடித்தார். இதன் மூலம் சவுதி அரேபியாயின் கனவு கொஞ்சம் கொஞ்சமாக கலைந்து கொண்டே வந்தது. இதுமட்டுமல்லாமல் 56ஆவது நிமிடத்தில் மீண்டும் மெக்சிகோ கோல் அடிக்க, அதனை நடுவர்கள் ஆஃப் சைடாக அறிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து மெக்சிகோ அணி மேலும் ஒரு கோல் அடித்தால், ரவுண்ட் ஆஃப் 16 சுற்றுக்கு முன்னேறும் என்ற நிலை உருவாகியது. இதனால் மெக்சிகோ வீரர்கள் அடுத்தடுத்து கோல் அடிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். அந்த அணியின் சாவேஸ் அடித்த ஃபிரீ கிக், சவுதி அரேபியா கோல் கீப்பரால் தடுக்கப்பட்டது. பின்னர் 86ஆவது நிமிடத்தில் மீண்டும் மெக்சிகோ அணி ஒரு கோல் அடிக்க, அது ஆஃப் சைடாக அறிவிக்கப்பட்டது.
தொடர்ந்து இரண்டாம் ஆட்டத்தில் 6 நிமிடங்கள் கூடுதலாக வழங்கப்பட்டது. அதில் சவுதி அரேபியா அணியின் சலீன் கோல் அடிக்க, மெக்சிகோ அணியின் கனவு மொத்தமாக கலைந்தது. இறுதியாக ஆட்டம் 2-1 என்ற கணக்கில் இப்போட்டி முடிவுக்கு வந்தது. இந்தப் போட்டியில் மெக்சிகோ அணி வெற்றிபெற்றாலும், 3 போட்டிகளிலும் சேர்த்து கோல்கள் அடிப்படையில் குரூப் சி பிரிவில் இருந்து அர்ஜென்டினா, போலாந்து அணிகள் அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளன.
இதனால் சவுதி அரேபியா மற்றும் மெக்சிகோ அணிகள் உலகக்கோப்பைத் தொடரில் இருந்து வெளியேறின. கடந்த 44 ஆண்டுகளில் மெக்சிகோ அணி முதல்முறையாக ரவுண்ட் ஆஃப் 16 சுற்றுக்கு முன்னேறாமல் வெளியேறியுள்ளது குறிப்பிடத்தக்கது. இதுவரை மெக்சிகோ அணி 7 முறை தொடர்ந்து ரவுண்ட் ஆஃப் 16 சுற்றுக்கு முன்னேறியுள்ளது.
Win Big, Make Your Cricket Tales Now