எல் கிளாசிகோ: பார்சிலோனாவை பந்தாடியது ரியல் மாட்ரிட்!
நடப்பு லா லீகா கால்பந்து தொடரில் பார்சிலோனா அணியை 3 - 1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி ரியல் மாட்ரிட் அணி அபார வெற்றியைப் பதிவுசெய்தது.
லா லீகா காலபந்து தொடரான ஸ்பெயினின் பாரம்பரியமிக்க கால்பந்து தொடர்களில் ஒன்றாக பார்க்கப்படுகிறது. ஏனெனில் இத்தொடரான கடந்த 1929 முதல் தற்போது வரை நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி நடப்பு 2022-23 சீசனுக்கான தொடர் இத்தொடரின் 92ஆவது சீசன் ஆகும்.
இந்த சீசனில் இதுவரையில் நடைபெற்றுள்ள லீக் போட்டிகளில் நடப்பு சாம்பியனான ரியல் மாட்ரிட் மற்றும் பார்சிலோனா அணிகள் புள்ளி பட்டியலில் முதல் இரண்டு இடங்களில் உள்ளன.
இந்நிலையில், இந்த இரண்டு அணிகளும் இடையேயான லீக் ஆட்டம் நேற்று நடைபெற்றது. இந்த இரு அணிகளும் மோதும் போட்டிகளை ‘எல் கிளாசிகோ’ என அறியப்படுகிறது. கால்பந்தாட்ட உலகில் கிளப் அணிகளுக்கு இடையில் நடைபெறும் போட்டிகளில் இது மிகவும் பிரபலமான போட்டியாகும்.
ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் தொடங்கிய இப்போட்டியில் தொடக்கம் முதலே ரியல் மாட்ரிட் அணி அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி அசத்தியது. அதன் பயனாக ஆட்டத்தின் 12ஆவது நிமிடத்தில் கரீம் பென்சிமாவும், ஆட்டத்தின் 35ஆவது நிமிடத்தில் ஃபெட்ரிகோ வால்வெர்டேவும் கோலடித்து அசத்தினர்.
இதனால் முதல் பாதி ஆட்டநேர முடிவில் ரியல் மாட்ரிட் அணி 2-0 என்ற கோல் கணக்கில் முன்னிலைப் பெற்றது. அதன்பின் இரண்டாம் பாதியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய பார்சிலோனா அணியின் ஃபெரான் டோரஸ் ஆட்டத்தின் 83ஆவது நிமிடத்தில் கோலடித்தார். ஆனால் அதன்பின் பார்சிலோனா அணியால் மேற்கொண்டு கோல்களைப் போடமுடியவில்லை.
இறுதியில் ஆட்டத்தின் கூடுதல் நேரமான 90+1 ஆவது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பை சிறப்பாக பயன்படுத்தைய ரோட்ரிகோ அதனை கோலாக மாற்றி ரியல் மாட்ரிட் அணிக்கு வெற்றியைப் பெற்றுக்கொடுத்தார்.
இதன்மூலம் ரியல் மாட்ரிட் அணி ஆட்டநேர முடிவில் 3-1 என்ற கோல் கணக்கில் பார்சிலோனாவை வீழ்த்தி அபார வெற்றியைப் பெற்றது.
Win Big, Make Your Cricket Tales Now