சர்வதேச டென்னிலிருந்து விடைபெற்றார் சானியா மிர்சா!
துபாய் ஓபன் டென்னிஸ் போட்டியில் தோல்வி கண்டதையடுத்து இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா கண்ணீருடன் விடைபெற்றார்.
இந்தியாவின் முன்னணி டென்னிஸ் வீராங்கனையாக இருப்பவர் சானியா மிர்சா. ஒற்றையர்போட்டியில் பிரகாசிக்காவிட்டாலும், மகளிர் இரட்டையர், கலப்பு இரட்டையர் போட்டிகளில் பட்டங்களை வென்று வந்தார். இவர் இதுவரை இரட்டையர் பிரிவில் 6 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ளார்.
இந்நிலையில் ஆஸ்திரேலியாவின் மெல்பர்னில் நடைபெற்ற ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் சானியா மிர்சா கலந்துகொண்டார். ஆஸ்திரேலிய ஓபனில் தோல்வி கண்டதையடுத்து பிப்ரவரியில் நடைபெறவுள்ள துபாய் ஓபன் டென்னிஸ் போட்டிதான் தனது கடைசி போட்டி என்று கண்ணீருடன் அறிவித்தார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாய் நகரில் துபாய் டூட்டி ப்ரீ ஓபன் டென்னிஸ் போட்டி தொடங்கியது. இந்நிலையில் நேற்று மாலை மகளிர் இரட்டையர் பிரிவு போட்டியில் அமெரிக்காவின் மேடிசன் கீயுடன் ஜோடி சேர்ந்து களமிறங்கினார் சானியா மிர்சா.
முதல் சுற்று ஆட்டத்தில் சானியா-மேடிசன் கீ ஜோடி, ரஷ்யாவின் வெரோனிகா குடெர்மிதோவா- எல்.சம்சோனோவா ஜோடி மோதியது. இதில் வெரோனிகா-சம்சோனோவா ஜோடி 6-4, 6-0 என்ற நேர் செட்களில் எளிதில் சானியா-மேடிசன் கீ ஜோடியை வீழ்த்தியது.
இதையடுத்து இந்தத் தொடரிலிருந்து சானியா மிர்சா-மேடிசன் கீ ஜோடி வெளியேறியது. தனது கடைசி போட்டி என்பதால் மைதானத்திலிருந்து கண்ணீருடன் வெளியேறினார் சானியா மிர்சா.
தனது போட்டி தொடங்குவதற்கு முன்பு செய்தியாளர்களிடம் பேசிய சானியா, “நீங்கள் பெண் குழந்தைகளாக பல்வேறு அழுத்தத்தை சமூகம் மூலம் நீங்கள் எதிர்கொள்வீர்கள். என் விஷயத்தில் நான் கொஞ்சம் அதிர்ஷ்டசாலி. என்னுடைய பெற்றோர்கள் எனக்கு உறுதுணையாக நின்றார்கள். ஆனால் இந்த சமூகத்தை நான் தனியாகத்தான் எதிர்கொண்டேன். நாம் சரியான திசையில் தான் சென்று கொண்டிருக்கிறோம் என்று இந்த சமூகத்திற்கு நாம் புரிய வைக்க வேண்டும். இளம் பெண்களுக்கு நான் சொல்லிக் கொள்வது ஒன்றே ஒன்றுதான்.
நீங்கள் நினைப்பதை செய்யக்கூடாது என்று யாரும் உங்களை தடுக்க நீங்கள் அனுமதிக்காதீர்கள். நீங்கள் என்ன செய்ய வேண்டும் ?என்ன செய்யக்கூடாது ? என்று மற்றவர்கள் உங்களுக்காக முடிவெடுக்க கூடாது. இந்த சமூகம் பெண் குழந்தைகளை அப்படித்தான் செய்யும். நீங்கள் தான் உங்களை நம்பி போராட வேண்டும். வாழ்க்கையில் நிச்சயம் நெருக்கடிகளும் அழுத்தங்களும் இருக்கத்தான் செய்யும். அதனை நீங்கள் எப்படி எதிர்கொள்கிறீர்கள் என்பதை பொறுத்துதான் நீங்கள் வெற்றி அடைவீர்களா என்பது தெரியும். நீங்கள் சாம்பியன் ஆவதும் சராசரி வீரர் ஆவதும் நீங்கள் எப்படி விளையாடுகிறீர்கள் என்பதை பொறுத்து அல்ல.
உங்களுக்கு இருக்கும் பிரச்சனைகளை நீங்கள் எப்படி எதிர்கொள்கிறீர்கள் என்பதை பொறுத்து அது அமையும். இந்திய டென்னிசில் மிகப்பெரிய பிரச்சனை இருக்கிறது. பல நாடுகள் டென்னிஸுக்கு லட்சம் கணக்கில் செலவு செய்கிறார்கள். ஆனால் இந்தியாவில் நாம் ஏதேனும் தொடர்வென்றால் மட்டுமே நம்மிடம் வந்து போட்டோ எடுத்து ரசிகர்கள் சென்றுவிடுவார்கள். இப்படி இருந்தால் எப்படி நம் நமது நாட்டில் சாம்பியன்ஸ் உருவாகுவார்கள். டென்னிஸில் சாதித்த இந்திய வீரர்களிடம் நீங்கள் கேட்டுப் பாருங்கள்.
இங்கு இருக்கும் சிஸ்டத்தால் நாங்கள் வெற்றி பெறவில்லை. இந்த சிஸ்டத்தையும் மீறி தான் நாங்கள் வெற்றி பெற்றிருக்கிறோம். உண்மையை சொல்லப் போனால் டென்னிசுக்காக இங்கு எந்த சிஸ்டமும் இல்லை” என்று கூறியுள்ள சானியா மிர்சா தற்போது இளம் வீராங்கனைகளுக்கு உதவுவதற்காக பயிற்சி அகாடமியை தொடங்கி நடத்த உள்ளதாக கூறினார்.
Win Big, Make Your Cricket Tales Now