
இந்தியாவின் நட்சத்திர டென்னில் வீராங்கனை 36 வயதான சானியா மிர்ஸா 2005ஆம் ஆண்டில் ஒற்றையர் பிரிவில் ஹைதராபாத் ஓபனை வென்றார். அவர் கைப்பற்றிய ஒரே டபிள்யூ.டி.ஏ. பட்டம் இதுதான். அதேசமயம் கிராண்ட்ஸ்லாமில் 6 இரட்டையர் பட்டத்தை வென்று வரலாறு படைத்தார். கிராண்ட்ஸ்லாம் வென்ற ஒரே இந்திய வீராங்கனையும் இவர் தான்.
இந்நிலையில், சானியா மிர்ஸாவின் சொந்த ஊரான தெலுங்கானாவின் ஹைதராபாத்தில் அவருக்கு பிரிவுபசாரம் அளிக்கும் வகையில் கண்காட்சி டென்னிஸ் போட்டிக்கு நேற்று ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் பங்கேற்க வந்த சானியாவுக்கு இளம் ரசிகைகள் இருபுறமும் பேட்டை உயர்த்தி நின்று கவுரவம் அளித்தனர்.
தனது கடைசி டென்னிஸ் போட்டியில் அடியெடுத்து வைத்த சானியாவுடன் சக நாட்டு வீரர் ரோகன் போபண்ணா, அமெரிக்காவின் பெதானி மாடக் சான்ட்ஸ், குரோஷியாவின் இவான் டோடிக் ஆகியோர் இணைந்து விளையாடினர். இரு கலப்பு காட்சி போட்டியிலும் சானியா மிர்சா வெற்றி பெற்றார்.