ஃபிஃபா உலகக்கோப்பை: தொடர்ச்சியாக மூன்றாவது முறையாக ரவுண்ட் ஆஃப் சுற்றில் சுவிட்சர்லாந்து!
செர்பியா அணிக்கு எதிரான போட்டியில் 3-2 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்று சுவிட்சர்லாந்து அணி, காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறியுள்ளது.
ஃபிஃபா உலகக்கோப்பை கால்பந்து தொடரில் குரூப் சுற்று போட்டிகள் இன்றுடன் முடிவடைகிறது. கடைசி நாளில் குரூப் ஜி பிரிவில் உள்ள சுவிட்சர்லாந்து - செர்பியா அணிகள் மோதின. சுவிட்சர்லாந்து அணி முந்தைய போட்டிகளில் ஒரு வெற்றி, ஒரு தோல்வியுடன் இருந்தது. மறுபக்கம் செர்பியா அணி முந்தைய போட்டியில் ஒரு டிரா மற்றும் ஒரு தோல்வியுடன் இருந்தது. இரு அணிகளில் யார் வெற்றிபெற்றாலும் அந்த அணி ரவுண்ட் ஆஃப் 16 சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பு இருந்தது.
இந்த நிலையில் முதல் பாதி ஆட்டம் தொடங்கியது முதலே இரு அணி வீரர்களும் ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதன் பலனாக சுவிட்சர்லாந்து அணியின் ஷகிரி 20ஆவது நிமிடத்தில் கோல் அடித்து அசத்தினார். ஆனால் சுவிட்சர்லாந்து அணியின் முன்னிலையை அடுத்த 6ஆவது நிமிடத்தில் செர்பியா அணி சமன் செய்தது. அந்த அணியின் மிட்ரோவிக் 26ஆவது நிமிடத்தில் முதல் கோலை அடித்து அசத்தினார்.
இதன் மூலம் ஆட்டம் 1-1 என்ற நிலையில், பரபரப்பாக இருந்தது. இதனைத் தொடர்ந்து ஆட்டத்தின் 35ஆவது நிமிடத்தில் செர்பிய அணியின் விளாஹோவிக் இரண்டாவது கோலை அடித்து அசத்த, அந்த அணி 2-1 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது. இதற்கு பதிலடியாக முதல் பாதியின் 44ஆவது நிமிடத்தில் சுவிட்சர்லாந்து அணியின் எம்போலோ இரண்டாவது கோலை அடித்தார். இதனைத் தொடர்ந்து முதல் பாதி ஆட்டம் 2-2 என்ற கோல் உடன் முடிவுக்கு வந்தது.
தொடர்ந்து இரண்டாவது பாதி ஆட்டம் பரபரப்பாக தொடங்கியது. அந்த பரபரப்புடன் 48ஆவது நிமிடத்தில் ஸ்விட்சர்லாந்து அணி மூன்றாவது கோலை அடித்தது. அந்த அணியின் ரெமோ சுவிட்சர்லாந்து அணிக்காக மூன்றாவது கோலை அடித்து முன்னிலை ஏற்படுத்தினார். இதற்கு பதிலடி கொடுக்க செர்பியா வீரர்கள் எடுத்த முயற்சிகள் சுவிட்சர்லாந்து அணி தடுப்பாட்ட வீரர்கள் தடுத்து நிறுத்தப்பட்டது.
இதே நிலை இரண்டாம் பாதியின் கடைசி நிமிடம் வரை தொடர, கூடுதலாக 7 நிமிடங்கள் வழங்கப்பட்டது. இதில் சுவிட்சர்லாந்து அணி கோல் அடிக்க முயற்சித்த போது, திடீரென இரு அணி வீரர்களும் மோதி கொண்டனர். தொடர்ந்து நடைபெற்ற ஆட்டத்தில் மேலும் எந்த கோல்களும் அடிக்கப்படாததால், சுவிட்சர்லாந்து அணி 3-2 என்ற கோல் கணக்கில் அபார வெற்றிபெற்றது.
இந்த வெற்றியின் மூலம் சுவிட்சர்லாந்து அணி ரவுண்ட் ஆஃப் 16 சுற்றுக்கு முன்னேறியுள்ளது. இதன் மூலம் தொடர்ந்து மூன்றாவது முறையாக ஃபிஃபா உலகக்கோப்பை கால்பந்து தொடரில் சுவிட்சர்லாந்து அணி ரவுண்ட் ஆஃப் 16 சுற்றுக்கு முன்னேறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
Win Big, Make Your Cricket Tales Now