
இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவரும் பாஜக எம்.பி.யுமான பிரிஜ் பூஷண் சரண் சிங் மீது மல்யுத்த வீரர்கள் பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார்கள். இந்திய ஒலிம்பிக் சங்கத்துக்கு மல்யுத்த வீரா், வீராங்கனைகள் எழுதியிருந்த கடிதத்தில், பிரிஜ் பூஷணுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தனா். மேலும், இந்திய மல்யுத்த சம்மேளனத்தில் நிதி கையாடல், தகுதியற்ற பயிற்சியாளா்கள் மற்றும் ஊழியா்கள் நியமனம் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளையும் அவா்கள் கூறியிருந்தனா்.
டபிள்யுஎஃப்ஐ தலைவராக பிரிஜ் பூஷன் சரண் சிங் (66) கடந்த 2011ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறாா். அவா், பல ஆண்டுகளாக மல்யுத்த வீராங்கனைகளுக்குப் பாலியல் தொல்லை அளிப்பதாக இந்திய நட்சத்திர வீராங்கனையும், போகத் சகோதரிகளில் ஒருவருமான வினேஷ் போகத் புதன்கிழமை குற்றம்சாட்டினாா். பிரிஜ் பூஷணுக்கு எதிராக, டெல்லி ஜந்தா் மந்தரில் இந்திய முன்னணி மல்யுத்த வீரா், வீராங்கனைகள் மூன்று நாள்களாகப் போராட்டத்தில் ஈடுபட்டார்கள்.
பிரிஜ் பூஷண் மீது மல்யுத்த வீராங்கனைகள் முன்வைத்துள்ள பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டு பூதாகரமாகி வரும் நிலையில், இந்திய ஒலிம்பிக் சங்க நிா்வாக கவுன்சிலின் அவசரக் கூட்டம், சங்கத் தலைவா் பிடி உஷா தலைமையில் டெல்லியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. பிரிஜ் பூஷண் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து விசாரிக்க ஏழு உறுப்பினா்கள் கொண்ட குழுவை அமைக்க முடிவு செய்யப்பட்டது.