
கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர்களில் முக்கியமான தொடராக கருத்தப்படும் விம்பிள்டன் தொடரின் நடப்பாண்டு சீசன் நேற்று கோலாகலமாக தொடங்கியது. முதல் நாள் ஆட்டங்களில் உலகின் நம்பா் 1 வீராங்கனையான போலந்தின் இகா ஸ்வியாடெக், நடப்பு சாம்பியனான சொ்பியாவின் நோவக் ஜோகோவிச் ஆகியோா் வெற்றி பெற்றனா்.
மகளிா் ஒற்றையா் பிரிவு ஆட்டங்களில், போலாந்திய இகா ஸ்வியாடெக் 6-1, 6-3 என சீனாவின் ஜு லின்னை மிக எளிதாகச் சாய்த்து அடுத்த சுற்றுக்கு முன்னேறினாா். போட்டித்தரவரிசையில் 4ஆஆம் இடத்தில் இருப்பவரான அமெரிக்காவின் ஜெஸ்ஸிகா பெகுலா 6-2, 6-7 , 6-3 என்ற செட்களில் சக அமெரிக்கரான லௌரென் டேவிஸை வீழ்த்தினாா்.
மற்றொரு ஆட்டத்தில் ரஷியாவின் வெரோனிகா குதா்மிடோவா 7-6, 6-4 என்ற செட்களில் எஸ்டோனியாவின் காயா கானெபியை வெளியேற்றினாா். அதேபோல் பெலாரஸின் விக்டோரியா அஸரென்கா 6-4, 5-7, 6-4 செட்களில் சீனாவின் யு யுவானை வென்றாா். இதர ஆட்டங்களில், அமெரிக்காவின் அலிசியா பாா்க்ஸ், ஸ்பெயினின் கிறிஸ்டினா பக்ஸா, ஆா்ஜென்டீனாவின் நாடியா பொடொரொஸ்கா, செக் குடியரசின் பாா்பரா ஸ்டிரைக்கோவா ஆகியோா் வெற்றி பெற்றனா்.