ஃபிஃபா உலகக்கோப்பை 2022: கோஸ்ட்டா ரிக்காவை ஊதித்தள்ளியது ஸ்பெயின்! மைதானத்தில் கோல் மழை!
கோஸ்ட்டா ரிக்கா அணிக்கு எதிரான ஃபிஃபா உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் ஸ்பெயின் அணி 7-0 என்ற கணக்கில் அபார வெற்றியை பதிவு செய்துள்ளது.
கத்தாரில் நடைபெற்று வரும் ஃபிஃபா உலகக்கோப்பைத் தொடரில் முன்னாள் சாம்பியன் அணிகளான அர்ஜென்டினா, ஜெர்மனி உள்ளிட்ட அணிகள் அடுத்தடுத்த நாட்கள் தோல்வியை சந்தித்துள்ளன. இதனால் முன்னாள் சாம்பியன் அணியான ஸ்பெயின் மோதும் போட்டி மீதான எதிர்பார்ப்பு அதிகரித்தது.
இந்த நிலையில் குரூப் ஈ பிரிவில் உள்ள ஸ்பெயின் அணியை எதிர்த்து உலகக்கோப்பைத் தொடருக்கு கடைசியாக தகுதிபெற்ற கோஸ்ட்டா ரிக்கா அணி விளையாடியது. இதற்கு முன்னதாக விளையாடிய போட்டியில் ஜெர்மனி அணிக்கு ஜப்பான் அதிர்ச்சி கொடுத்ததால் இந்தப் போட்டியிலும் அப்செட் நடக்க வாய்ப்பு இருக்குமா என்ற எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் அந்த எதிர்பார்ப்புக்கு ஆட்டம் தொடங்கிய சில நிமிடங்களிலேயே ஸ்பெயின் அணி பதிலடி கொடுத்தது. ஆட்டத்தின் 11ஆவது நிமிடத்தில் டேனி ஒல்மோ ஸ்பெயின் அணிக்காக முதல் கோலை அடித்து அசத்தினார்.
இதனைத் தொடர்ந்து கோஸ்ட்டா ரிக்கா அணி எழுச்சி பெறுமா என்ற எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 21வது நிமிடத்தில் ஸ்பெயின் அணியின் மார்கோ அசான்சியோ இரண்டாவது கோலை அடித்து மிரட்டினார். இனியாவது கோஸ்ட்டா ரிக்கா கண் முழிக்குமா என்று பார்த்த நிலையில், 31வது நிமிடத்தில் ஸ்பெயின் அணிக்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. அதில் அந்த அணியின் நட்சத்திர வீரர் ஃபெரன் டோரஸ் மூன்றாவது கோலை அடித்தார்.
இதன் மூலம் முதல் பாதி ஆட்ட நேர முடிவில் ஸ்பெயின் அணி 3-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது. இதன் பின்னர் இரண்டாவது பாதியின் தொடக்கம் முதலே ஸ்பெயின் அணி ஆக்ரோஷத்தை அதிகரித்தது. இதன் பலனாக 54ஆவது நிமிடத்தில் ஃபெரன் டோரஸ் 4ஆவது கோலை அடித்து அசத்தினார்.
அதன்பின்னர் 74ஆவது நிமிடத்தில் ஸ்பெயின் இளம் வீரர் காவி ஒரு கோல் அடிக்க, தொடர்ந்து இரண்டாம் பாதியின் கடைசி நிமிடத்தில் சோலரும் கோல் அடித்தார். ஆட்டம் முடிந்தது என்ற நினைத்த போது, கூடுதல் நிமிடத்திலும் ஸ்பெயின் அணியின் ஆல்வரோ மொரட்டா 7ஆவது கோலை அடித்து அசத்தினார். இதன் மூலம் ஸ்பெயின் அணி 7-0 என்ற கணக்கில் வெற்றிபெற்றது.
இந்தப் போட்டியில் ஸ்பெயின் அணி 1043 பாஸ்களையும், கோஸ்ட்டா ரிக்கா அணி 231 பாஸ்களையும் மட்டுமே அடித்துள்ளன. அதுமட்டுமல்லாமல் கோஸ்ட்டா ரிக்கா அணிக்கு ஒரு கார்னர் வாய்ப்பு கூட கிடைக்கவில்லை.ஒரு கட்டத்தில் ஸ்பெயின் அணி பயிற்சி மேற்கொள்வது போல் அனைத்து வீரர்களையும் களமிறக்கியது.இதன் பலனாக உலகக்கோப்பை கால்பந்து தொடரில் ஸ்பெயின் அணி 6 க்கும் மேற்பாட்ட கோல்களை அடித்து புதிய சாதனையையும் நிகழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
Win Big, Make Your Cricket Tales Now