
இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவரும், பாஜக எம்பியுமான பிரிஜ் பூஷண் சிங் மீது பாலியல் புகாா் கூறி, கடந்த ஒரு மாதமாக தில்லி ஜந்தா் மந்தரில் இந்திய மல்யுத்த வீராங்கனைகள் சாக்ஷி மாலிக், விக்னேஷ் போகத், வீரா் பஜ்ரங் புனியா உள்ளிட்டோா் தொடா் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனா். பிரிஜ் பூஷண் சிங் மீது நடவடிக்கை கோரி வீராங்கனைகள் தொடுத்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்த டெல்லி காவல் துறையினருக்கு உத்தரவிட்டது.
இந்நிலையில், கடந்த 28ஆம் தேதி புதிய நாடாளுமன்றக் கட்டடம் திறக்கப்பட்டவுடன்,டெல்லி ஜந்தா் மந்தரில் இருந்து இவா்கள் தடையை மீறி நாடாளுமன்றம் நோக்கி பேரணியாகச் சென்றனா். அவா்களைத் தடுத்து நிறுத்தி தடுப்புக் காவலில் கொண்டு சென்ற டெல்லி காவல்துறையினர், சாக்ஷி மாலிக், விக்னேஷ் போகட், பஜ்ரங் புனியா ஆகியோா் மீது வழக்குப் பதிவு செய்தனா்.
இந்நிலையில், வீரர்களின் கைதுக்கு கண்டனம் தெரிவித்து உலக மல்யுத்த கூட்டமைப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், "இந்திய மல்யுத்த சம்மேளன தலைவரின் பாலியல் தொல்லை தொடர்பான விவகாரத்தில் கடந்த சில மாதங்களாக இந்தியாவில் மல்யுத்த வீரர், வீராங்கனைகள் போராடிவருகின்றனர். இதை உலக மல்யுத்த கூட்டமைப்பு கவனித்துவருகிறது. ஆரம்பத்திலேயே இந்தப் பிரச்னைக்குத் தீர்வு கண்டிருந்தால் இந்தச் சூழலைத் தவிர்த்திருக்கலாம். மல்யுத்த வீரர், வீராங்கனைகள் பேரணி செல்ல முயன்றபோது கைதுசெய்தது மற்றும் ஒரு மாதமாக அவர்கள் போராடிய இடத்திலிருந்து வெளியேற்றியது பெரும் துயரளிக்கும் செய்தியாகும்.