ஒட்டுமொத்த அணியாக நாங்கள் சிறப்பாக செயல்பட்டுள்ளோம் - ரோஹித் சர்மா!
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டி நேற்று (பிப்ரவரி 6) தொடங்கிய. நாக்பூரில் உள்ள விதர்பா கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் ஜோஸ் பட்லர் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து இந்திய அணியை பந்துவீச அழைத்ததார்.
இதையடுத்து களமிறங்கிய இங்கிலாந்து அணியில் தொடக்க வீரர்கள் பில் சால்ட் 43 ரன்களையும், பென் டக்கெட் 33 ரன்களையும் சேர்த்து அதிரடியான தொடக்கத்தை கொடுத்தனர். அதன்பின் களமிறங்கிய கேப்டன் ஜோஸ் பட்லர் 52 ரன்களிலும், ஜேக்கோப் பெத்தேல் 51 ரன்களிலும் ஆட்டமிழக்க, பின்னர் களமிறங்கிய வீரர்கள் சோபிக்க தவறினர். இறுதியில் 47.4 ஓவர்களில் இங்கிலாந்து அணி 248 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இந்திய அணி தரப்பில் ஜடேஜா, ராணா தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.
அதன்பின் 249 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணியில் கேப்டன் ரோஹித் சர்மா, யஷஸ்வி ஜெய்ஸ்வால் சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழந்தனர். அதன்பின் களமிறங்கிய ஸ்ரேயாஸ் ஐயர் அதிரடியாக விளையாடி அரைசதம் கடந்த கையோடு 59 ரன்களிலும், அக்ஸர் படேல் 52 ரன்களையும் சேர்த்து விக்கெட்டை இழக்க, சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ஷுப்மன் கில்லும் 87 ரன்களில் ஆட்டமிழந்தார்.
இருப்பினும் ஹர்திக் பாண்டியா 9 ரன்களையும், ரவீந்திர ஜடேஜா 12 ரன்களையும் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தனர். இதன்மூலம் இந்திய அணி 39.4 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி வெற்றிபெற்றதுடன் 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலையும் வகிக்கிறது. இப்போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஷுப்மன் கில் ஆட்டநாயகன் விருதை வென்றார்.
இந்நிலையில் இப்போட்டியின் வெற்றி குறித்து பேசிய இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா, “இப்போட்டியில் வெற்றிபெற்றது மகிழ்ச்சியளிக்கிறது. ஏனெனில் நீண்ட நாள்களுக்கு பிறகு நாங்கள் ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறோம். அதனால் இப்போட்டியின் தொடக்கம் முதலே நாங்கள் எதிர்பார்த்ததை போல் விளையாட வேண்டும் என்று நினைத்தோம். இங்கிலாந்து அணி தொடக்கத்தில் அதிரடியாக விளையாடினாலும், நாங்கள் திரும்பி வந்த விதம் மகிழ்ச்சியளிக்கிறது.
Also Read: Funding To Save Test Cricket
இப்போட்டிக்கு முன்னர் மிடில் ஆர்டரில் ஒரு இடதுகை வீரர் வேண்டும் என்று நினைத்தோம். ஏனெனில் அவர்கள் மிடில் ஓவர்களை சுழற்பந்து வீச்சாளர்கள் வீசும் சமயத்தில் எங்களுக்கு உதவ இந்த முடிவை எடுத்தோம். நாங்கள் எதிர்பார்த்தை போல் அந்த முடிவு எங்களுக்கு வேலை செய்தது. இதில் ஷுப்மன் மற்றும் அக்ஸர் இருவரும் சிறப்பாக விளையாடினர். மேலும் ஒட்டுமொத்த அணியாக நாங்கள் சிறப்பாக செயல்பட்டுள்ளோம். ஒரு அணியாக, முடிந்தவரை சரியான விஷயங்களைச் செய்ய வேண்டும் என நான் விரும்புறேன்” என்று தெரிவித்துள்ளார்.