ENG vs WI, 1st Test: முதல் நாளிலேயே வலிமையான தொடக்கத்தைப் பெற்ற இங்கிலாந்து!

Updated: Thu, Jul 11 2024 10:03 IST
Image Source: Google

இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணியானது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. அதன்படி இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டியானது நேற்று லண்டனில் உள்ள புகழ்பெற்ற லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் பென் ஸ்டோக்ஸ் முதலில் பந்துவீசுவதாக அறிவித்தார். மேலும் இப்போட்டிக்கான இங்கிலாந்து அணியில் கஸ் அட்கின்சன், ஜேமி ஸ்மித்தும், வெஸ்ட் இண்டீஸ் அணியில் மைக்கெல் லூயிஸ் உள்ளிட்ட அறிமுக வீரர்களுக்கு வாய்ப்பு கிடைத்தது. 

இதனையடுத்து முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு கேப்டன் கிரேக் பிராத்வைட் - மைக்கேல் லூயிஸ் ஆகியோர் தொடக்கம் கொடுத்தனர். இதில் கேப்ட பிராத்வைட் 6 ரன்களில் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய கிர்க் மெக்கன்ஸியும் ஒரு ரன்னுடன் நடையைக் கட்டினார். அதன்பின் ஓரளவு தாக்குப்பிடித்து விளையாடிய அறிமுக வீரர் மைக்கேல் லூயிஸ் 27 ரன்கள் எடுத்திருந்த நிலையில் பென் ஸ்டோக்ஸ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அவரைத்தொடர்ந்து 23 ரன்களில் அலிக் அதானாஸும், அடுத்து வந்த ஜேசன் ஹோல்டர், ஜோஷுவா டா சில்வா ஆகியோர் அடுத்தடுத்து ரன்கள் ஏதுமின்றியும் என அட்கின்சன் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தனர். 

அதனைத்தொடர்ந்து மறுபக்கம் நிதானமாக விளையாடி வந்த கேவம் ஹெட்ஜ் 24 ரன்களுக்கும், அதன்பின் களமிறங்கிய அல்ஸாரி ஜோசப் 17 ரன்களுக்கும், ஷமார் ஜோசப் ரன்கள் ஏதுமின்றியும் என அட்கின்சன் பந்துவீச்சுக்கு விக்கெட்டை பறிகொடுத்தனர். இதன் காரணமாக வெஸ்ட் இண்டீஸ் அணியானது முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்ததுடன் 121 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இங்கிலாந்து அணி தரப்பில் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய அறிமுக வீரர் கஸ் அட்கின்சன் 7 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். 

இதனையடுத்து முதல் இன்னிங்ஸை தொடங்கிய இங்கிலாந்து அணிக்கு ஸாக் கிரௌலி மற்றும் பென் டக்கெட் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் பென் டக்கெட் 3 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்தார். அதன்பின் கிரௌலியுடன் இணைந்த ஒல்லி போப் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். தொடர்ந்து சிறப்பாக விளையாடிய இருவரும் தங்களது அரைசதங்களைப் பதிவுசெய்ததுடன் 94 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அசத்தினர். அதன்பின் அரைசதம் கடந்திருந்த ஒல்லி போப் 57 ரன்கள் எடுத்திருந்த நிலையில் விக்கெட்டை இழந்தார்.

Also Read: Akram ‘hopes’ Indian Team Will Travel To Pakistan For 2025 Champions Trophy

அதன்பின் மறுபக்கம் சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ஸாக் கிரௌலியும் 76 ரன்களில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார். இதையடுத்து ஜோடி சேர்ந்துள்ள ஜோ ரூட் - ஹாரி ப்ரூக் இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். இதன்மூலம் முதல்நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி 3 விக்கெட் இழப்பிற்கு 189 ரன்களைச் சேர்த்தது. இதில் ஜோ ரூட் 15 ரன்களுடனும், ஹாரி ப்ரூக் 25 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். விண்டீஸ் தரப்பில் ஜெய்டன் சீல்ஸ் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதனையடுத்து 68 ரன்கள் முன்னிலையுடன் இங்கிலாந்து அணி இன்று இரண்டாம் நாள் ஆட்டத்தை தொடரவுள்ளது.  

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை