ஜிம்பாப்வே - ஆஃப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது.  அதன்படி இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி புலவாயோவில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து முதல் இன்னிங்ஸில் 586 ரன்களைக் குவித்தது. இதில் அதிகபட்சமாக சீன் வில்லியம்ஸ் 153 ரன்களையும், கிரேய்க் எர்வின் 104 ரன்களையும் மற்றும் பிரையன் பென்னட் 110 ரன்களையும் சேர்த்தனர்.

Advertisement

ஆஃப்கானிஸ்தான் அணி தரப்பில் அல்லா கசான்ஃபர் 3 விக்கெட்டுகளையும், நவீத் ஸத்ரான், ஜாகீர் கான் மற்றும் ஸியா உர் ரஹ்மான் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். அதன்பின் முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய ஆஃப்கான் அணிக்கு எதிர்பார்த்த தொடக்கம் கிடைக்கவில்லை.  அந்த அணியின் தொடக்க வீரர்கள் செதிகுல்லா அடல் 3 ரன்னிலும், அப்துல் மாலிக் 23 ரன்னிலும் என விக்கெட்டை இழந்தனர். அதன்பின் ஜோடி சேர்ந்த ரஹ்மத் ஷா மற்றும் ஹஸ்மதுல்லா ஷாஹிதி இணை பொறுப்புடன் விளையாடி விக்கெட் இழப்பை தடுத்ததுடன் அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர்.

Advertisement

இதில் இருவரும் தங்கள் சதங்களைப் பதிவுசெய்து அசத்தினர். மேலும் இவர்கள் இருவரது பார்ட்னர்ஷிப்பையும் உடைக்க முடியாமல் ஜிம்பாப்வே அணி பந்துவீச்சாளர் தடுமாறினர். இப்போட்டியில் அபாரமாக விளையாடி வரும் ரஹ்மத் ஷா சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது முதல் இரட்டை சதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். இதில் ரஹ்மத் ஷா 23 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 234 ரன்களில் விக்கெட்டை இழந்தார். அதன்பின் ஷாஹிதியுடன் இணைந்த அஃப்சர் ஸஸாயும் பொறுப்புடன் விளையாடினர். இதனால் நான்காம் நாள் ஆட்டநேர முடிவில் ஆஃப்கானிஸ்தான் அணி 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 513 ரன்களைக் குவித்ததது. 

இதையடுத்து இன்று தொடங்கிய கடைசி நாள் ஆட்டத்தை கேப்டன் ஹஸ்மதுல்லா ஷாஹிதி 179 ரன்களுடனும், அஃப்சர் ஸஸாய் 46 ரன்களுடனும் தொடர்ந்தனர். இப்போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஹஸ்மதுல்லா ஷாஹிதி தனது இரட்டை சதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். அவருடன் இணைந்து விளையாடிய அஃப்சர் ஸஸாயும் தனது சதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். அதன்பின் 113 ரன்கள் எடுத்திருந்த நிலையில் அஃப்சர் ஸஸாயும், 246 ரன்கள் குவித்த நிலையில் ஹஸ்மதுல்லா ஷாஹிதியும் தனது விக்கெட்டை இழக்க, அடுத்து வந்த வீரர்கள் அடுத்தடுத்து சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். 

இதனால் ஆஃப்கானிஸ்தான் அணி முதல் இன்னிங்ஸில் 699 ரன்களைக் குவித்து ஆல் அவுட்டானது. ஜிம்பாப்வே அணி தரப்பில் பிரையன் பென்னட் 5 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். இதனையடுத்து 113 ரன்கள் பின் தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடர்ந்த ஜிம்பாப்வே அணியில் பென் கரன் 41 ரன்களையும், சீன் வில்லியம்ஸ் 35 ரன்களையும் சேர்த்ததன் காரணமாக 5ஆம் நாள் ஆட்டநேர முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 142 ரன்களைச் சேர்த்தது. இதனால் இப்போட்டியானது முடிவு எட்டப்படாமல் டிராவில் முடிவடைந்ததாக அறிவிக்கப்பட்டது. 

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News