பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணியானது அயர்லாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்ற முதல் டி20 போட்டியில் அயர்லாந்து அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி அபார வெற்றிய்யைப் பதிவுசெய்து அசத்தியது. இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டி20 போட்டி டப்ளினில் நேற்று நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்து அயர்லாந்து அணியை பேட்டிங் செய்ய அழைத்தது. 

Advertisement

அதன்படி களமிறங்கிய அயர்லாந்து அணிக்கு கேப்டன் பால் ஸ்டிர்லிங் - ஆண்ட்ரூ பால்பிர்னி இணை தொடக்கம் கொடுத்தனர். இருவரும் அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்த நிலையில் பால் ஸ்டிர்லிங் 11 ரன்களுக்கும், ஆண்ட்ரூ பால்பிர்னி 16 ரன்களுக்கும் என அடுத்தடுத்து ஷாஹீன் அஃப்ரிடி பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தனர். அதன்பின் இணைந்த லோர்கன் டக்கர் - ஹாரி டெக்டர் இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். இப்போட்டியில் அதிரடியாக விளையாடிய ஹாரி டெக்டர் அரைசதம் அடிப்பர் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 32 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். 

Advertisement

அடுத்து களமிறங்கி சிறப்பாக விளையாடிய கர்டிஸ் காம்பெரும் 22 ரன்களில் விக்கெட்டை இழக்க, மறுபக்கம் அதிரடியாக விளையாடி வந்த லோர்கன் டக்கர் அரைசதம் கடந்த நிலையில் 5 பவுண்டரிகள், 2 சிக்ஸர்கள் என 51 ரன்களை எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அதன்பின் களமிறங்கிய ஜார்ஜ் டக்ரெல் 15 ரன்களிலும், மார்க் அதிர் 9 ரன்களிலும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். இருப்பினும் இப்போட்டியில் ஏழாவது விக்கெட்டிற்கு களமிறங்கிய கரெத் டெலானி அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 3 பவுண்டரி, 2 சிக்ஸர்களை விளாசி 28 ரன்களைச் சேர்த்தார். 

இதன்மூலம் அயர்லாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்திருந்தாலும், 193 ரன்களைக் குவித்தது. பாகிஸ்தான் அணி தரப்பில் அதிகபட்சமாக ஷாஹீன் அஃப்ரிடி 3 விக்கெட்டுகளையும், அப்பாஸ் அஃப்ரிடி 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இதனையடுத்து 194 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய பாகிஸ்தான் அணியின் நட்சத்திர வீரர்கள் சைம் அயூஒ 6 ரன்களிலும், கேப்டன் பாபர் ஆசாம் ரன்கள் ஏதுமின்றியும் விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தனர். அதன்பின் ஜோடி சேர்ந்த முகமது ரிஸ்வான் - ஃபகர் ஸமான் இணை அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். 

தொடர்ந்து அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் அரைசதம் கடந்ததுடன், மூன்றாவது விக்கெட்டிற்கு 140 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அசத்தினர். அதன்பின் அதிரடியாக விளையாடி வந்த ஃப்கர் ஸமான் 6 பவுண்டரி, 6 சிக்ஸர்கள் என 78 ரன்கள் சேர்த்திருந்த நிலையில் விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார். இருப்பினும் மறுபக்கம் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த முகமது ரிஸ்வான் 6 பவுண்டரி, 4 சிக்ஸர்கள் என 75 ரன்களைச் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தார். இதன் மூலம் பாகிஸ்தான் அணி 16.5 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 7 விக்கெட் வித்தியாசத்தில் அயர்லாந்தை வீழ்த்தி 1-1 என்ற கணக்கில் தொடரை சமன்செய்துள்ளது. 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News