2nd Test, Day 1: வெஸ்ட் இண்டீஸ் அணியை சரிலிருந்து மீட்ட ஹாட்ஜ், ஜோசுவா!

Updated: Thu, Jan 25 2024 17:33 IST
Image Source: Google

ஆஸ்திரேலியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று பிரிஸ்பேனில் தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. 

இதையடுத்து இன்னிங்ஸைத் தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணியில் கேப்டன் கிரேய்க் பிரேத்வைட் 4 ரன்களில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார். அதன்பின் இணைந்த சந்தர்பால் - மெக்கன்ஸி இணை ஓரளவு தாக்குபிடித்து விளையாடினர். பின்னர் மெக்கன்ஸி 21 ரன்களில் கம்மின்ஸ் பந்துவீச்சிலும், சந்தர்பால் 21 ரன்களில் ஸ்டார்க் பந்துவீச்சிலும் என விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர். 

இதையடுத்து களமிறங்கிய அலிக் அதானஸ் 8 ரன்களுக்கும், ஜஸ்டின் க்ரீவ்ஸ் 6 ரன்களுக்கும் என விக்கெட்டை இழந்த வெஸ்ட் இண்டீஸ் அணி 64 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அதன்பின் இணைந்த கவேம் ஹாட்ஜ் - ஜோசுவா டா சில்வா இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி விக்கெட் இழப்பை தடுத்ததுடன் இருவரும் அரைசதம் கடந்து அணியின் ஸ்கோரையும் உயர்த்தினர். 

அதன்பின் 79 ரன்கள் எடுத்த நிலையில் ஜோசுவா டா சில்வா விக்கெட்டை இழக்க, அவரைத்தொடர்ந்து 71 ரன்கள் எடுத்திருந்த கவேம் ஹாட்ஸும் விக்கெட்டை இழந்தார். அதன்பின் இணைந்த கெவின் சின்க்ளேர் - அல்ஸாரி ஜோசப் இணையும் அதிரடியாக விளையாடினர். இதில் 22 பந்துகளில் 32 ரன்களை எடுத்திருந்த அல்ஸாரி ஜோசப்பும் தனது விக்கெட்டை இழந்தார்.

இதன்மூலம் முதல்நாள் ஆட்டநேர முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி 8 விக்கெட்டுகளை இழந்து 266 ரன்களைச் சேர்த்துள்ளது. வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் கெவின் சின்க்ளேர் 16 ரன்களுடன் களத்தில் உள்ளார். ஆஸ்திரேலிய அணி தரப்பில் சிறப்பாக பந்துவீசிய மிட்செல் ஸ்டார்க் 4 விக்கெட்டுகளையும், ஜோஷ் ஹசில்வுட் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளனர். இதையடுத்து 2 விக்கெட்டுகள் கைவசம் உள்ள நிலையில் விண்டீஸ் அணி நாளை இரண்டாம் நாள் ஆட்டத்தை தொடரவுள்ளது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை